வேல்முருகனை விடுதலை செய்ய கோரி டாஸ்மாக் கடை சூறையாடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்


வேல்முருகனை விடுதலை செய்ய கோரி டாஸ்மாக் கடை சூறையாடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
x
தினத்தந்தி 9 Jun 2018 4:15 AM IST (Updated: 9 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

வேல்முருகனை விடுதலை செய்ய கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையம் கிராமத்தில் சுடுகாடு செல்லும் சாலையோரம் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி(வயது 44) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். உதவியாளராக பண்ருட்டி குடினாங்குப்பத்தை சேர்ந்த திருஞானம்(56) என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், கடைக்குள் புகுந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை உருட்டுக்கட்டைகளால் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

மேலும் அவர்கள் கடைக்குள் அட்டை பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் எடுத்து கடையின் முன்பு வீசி எரிந்து உடைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்களான புண்ணியமூர்த்தி, திருஞானம் ஆகியோர், அந்த மர்ம கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல், கடை ஊழியர்கள் 2 பேரையும் நெட்டி கீழே தள்ளிட்டு விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் கடையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் உடைத்து சூறையாடப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மகும்பலால் சூறையாடப்பட்ட டாஸ்மாக கடையை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைது செய்யப்பட்ட வேல்முருகனை உடனே விடுவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தயாநிதி தலைமையிலான கும்பல் டாஸ்மாக் கடையை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், டாஸ்மாக் கடையை சூறையாடியதாக ஒன்றிய செயலாளர் தயாநிதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story