தீப்பெட்டிக்கான கூலி உயர்வை வழங்கக்கோரி கோவில்பட்டியில், 19–ந் தேதி நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு


தீப்பெட்டிக்கான கூலி உயர்வை வழங்கக்கோரி கோவில்பட்டியில், 19–ந் தேதி நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 9:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:17 PM GMT)

தீப்பெட்டிக்கான கூலி உயர்வை வழங்கக்கோரி, கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு 19–ந் தேதி நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டத்தை ஒத்திவைப்பது என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கோவில்பட்டி,

தீப்பெட்டிக்கான கூலி உயர்வை வழங்கக்கோரி, கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு 19–ந் தேதி நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டத்தை ஒத்திவைப்பது என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சமாதான கூட்டம்

கோவில்பட்டி தாலுகாவில் தீப்பெட்டி தொழிற்சாலை, பகுதி எந்திர தொழிற்சாலை, கையினால் தீப்பெட்டி தயாரித்தல் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி நிறுவனங்கள் உள்ளன. 150 பெட்டிகளுக்கு தீக்குச்சி அடைப்பதற்கான கூலி கடந்த மார்ச் மாதம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த கூலி உயர்வை, பெரும்பாலான தீப்பெட்டி நிறுவனங்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து உயர்த்தப்பட்ட கூலியை வழங்கக்கோரி, வருகிற 19–ந் தேதி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை சமாதான கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் செழியன் தலைமை தாங்கினார். தாசில்தார் பரமசிவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, தூத்துக்குடி தொழிலாளர் நல உதவி ஆணையாளர் பாலமுருகன், விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணையாளர் திருவள்ளுவன், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ், நே‌ஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தி சங்க செயலாளர் சேதுரத்தினம் ஆகியோரும், தொழிற்சங்கம் சார்பில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ணவேணி, மோகன்தாஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

19–ந் தேதி போராட்டம் ஒத்திவைப்பு

கூட்டத்தில், உயர்த்தப்பட்ட கூலி 6 ரூபாய் வழங்க வேண்டும். இதனை வழங்காத தீப்பெட்டி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தவில்லை எனில், வருகிற 19–ந் தேதி நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டத்தை ஒத்திவைத்து, வருகிற 26–ந் தேதி போராட்டம் நடத்துவோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பினர் கூறுகையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கங்களை அழைத்து மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி கூறினர்.


Next Story