மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு + "||" + Andipatti Government Girls Higher Secondary School Collector review

ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஏத்தக்கோவில் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்–2 வகுப்பு வரை 1,700 மாணவிகள் படித்து வருகின்றனர். 64 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95 சதவீதமும், பிளஸ்–1 தேர்வில் 96 சதவீதமும், 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையிலும், ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டும் விதமாகவும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று பள்ளிக்கு திடீரென வருகை தந்து ஆய்வு செய்தார். அங்கு அவர் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவிகளின் கல்வித்திறன் குறித்து கேட்டு கலந்துரையாடினார்.

பின்னர் கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவிகள் பங்குபெற்று வெற்றி பெற வெறும் மனப்பாடம் மட்டுமே போதாது. பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்கும் போது, அதனை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். உற்சாகமும், மன உறுதியும், தன்னம்பிக்கையுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அறிவுரை வழங்கினார்.

கலெக்டர் வருகையை தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர் சார்பில் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கூடுதல் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கூடுதல் வகுப்பறைகள் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.