ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ஊரணி, குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்


ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ஊரணி, குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:17 PM GMT)

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊரணி, குளங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியத்தில் 16 பெரிய கண்மாய்கள் 200–க்கும் மேற்பட்ட ஊரணி மற்றும் குளங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் மட்டும் 121 ஊரணி மற்றும் குளங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை கை கொடுக்காததால் கண்மாய், குளங்கள் வறண்டு போய் விவசாயம் கேள்விக்குறியானது. நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய், குளங்கள் முட்புதர்களால் மண்டி கிடந்தது.

தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஊரணி மற்றும் குளங்களை தூர்வார, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ராமகிருஷ்ணாபுரம், திருமலாபுரம், தேக்கம்பட்டி, அனுப்பபட்டி, கரட்டுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி கிராமங்களில் உள்ள ஊரணி மற்றும் குளங்களுக்கான நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, குளங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) ஜெயலட்சுமி, உதவி திட்ட இயக்குனர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எபி, பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மற்ற ஊராட்சிகளிலும் குளங்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story