கோத்தகிரியில் சாலையில் நடந்து சென்ற போது காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்


கோத்தகிரியில் சாலையில் நடந்து சென்ற போது காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jun 2018 4:30 AM IST (Updated: 9 Jun 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை காட்டெருமை தாக்கியதால் படுகாயமடைந்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களையும் காட்டெருமை துரத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி நகர் பகுதியான மி‌ஷன் காம்பவுண்டு பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், தனியார் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்தவர்களின் ஆலயம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம். இந்த பகுதியின் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டெருமை குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்நிலையில் அந்த காட்டெருமை சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அந்த சாலையின் ஒரத்தில் காலிபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் முதியவர் ஒருவர் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது காட்டெருமை அவரை பலமாக தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இருந்தபோதிலும் அந்த காட்டெருமைக்கு ஆத்திரம் தீரவில்லை. தவறி விழுந்த அவரை மீண்டும், காட்டெருமை தாக்கியது. இந்த நிலையில்அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்ததனர். அப்போது பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காட்டெருமை சாலையில் நின்று கொண்டிருந்தவர்களையும், வீடுகளுக்கு முன் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருப்பவர்களையும் துரத்தியதால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர்கள் முருகன், வினோத் உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது காட்டெருமை அங்கும், இங்கும் உலாவிக்கொண்டிருநதது. அதனை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டுவது குறித்து ஆலோசனை செய்தனர். இதற்கிடையில் காட்டெருமை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் முதியவரை ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:– காட்டெருமை தாக்கி காயமடைந்த முதியவர் கோத்தகிரி, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த கந்தையன் (வயது 82) ஆவார். அவருக்கு வனத்துறை சார்பில் உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதியவரை தாக்கிய காட்டெருமை கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் குட்டியை ஈன்றுள்ளதால் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை குடியிருப்பு பகுதி, சாலைக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story