ஊட்டி பகுதியில் பலத்த காற்றுடன்மழை; 21 மரங்கள் முறிந்து விழுந்தன


ஊட்டி பகுதியில் பலத்த காற்றுடன்மழை; 21 மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 7:25 PM GMT)

ஊட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 21 மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் விழுந்ததில் 3 கார்கள், ஆட்டோ சேதமடைந்தன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஊட்டி நகரில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஊட்டி பட்பயர் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென மரம் ஒன்று வேருடன் முறிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ மற்றும் கார் மீது விழுந்தது. இதில் ஆட்டோ சேதமடைந்தது. மேலும் அந்த மரம் மின் ஒயர்களின் மீது விழுந்ததால், அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் ஒரு மின்கம்பம் முறிந்து இரண்டு கார்கள் மீது விழுந்தது. இதனால் அந்த இரண்டு கார்களும் சேதமடைந்தன. இதனால் மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டன.

அதிகாலையில் மரம் மற்றும் மின்கம்பம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் மின் ஒயர்கள் பல வீடுகளின் முன்பகுதியில் விழுந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின் ஒயர்கள் மற்றும் மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ஊட்டியில் இருந்து பாலடா செல்லும் சாலையில் திடீரென எதிர்பாராதவிதமாக நேற்று சுமார் 140 அடி ராட்சத கற்பூர மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த மரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித தாமஸ் ஆலய கல்லறை தோட்டத்தில் விழுந்ததால், சில கல்லறைகள் சேதமடைந்தன. சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் பஸ்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன் காரணமாக தாம்பட்டி, மேல்கவ்வட்டி, மடித்தொரை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 5 அரசு பஸ்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. அந்த பஸ்களில் வந்த பயணிகள் கீழே இறங்கி மத்திய பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்ற முயன்றனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்க வில்லை. அதனை தொடர்ந்து இருபுறங்களிலும் உள்ள மின்கம்பங்களில் செல்லும் மின் ஒயர்களை கழற்றி விட்டு, மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மழை காரணமாக ஊட்டி, அவலாஞ்சி, தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 மரங்கள் விழுந்தன. மேலும் தார்நாடுமந்து, பட்பயர், பெர்ன்ஹில், எல்லநள்ளி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 10 மரங்கள் விழுந்தன. மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருவதால், உயரமான மரங்களுக்கு அருகே வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊட்டி நகரில் ஆங்காங்கே மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து உள்ளதால், ஊட்டி நகர் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–

கூடலூர்–32, குந்தா–3, கேத்தி–2, கோத்தகிரி–5, நடுவட்டம்–12.5, ஊட்டி–4.1, கிளன்மார்கன்–6, அப்பர்பவானி–48, எமரால்டு–20, அவலாஞ்சி–61, கெத்தை–1, தேவாலா–59 என மொத்தம் 253 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊட்டியில் மழை குறைவாக பெய்தாலும், பலத்த காற்று வீசியதால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story