கீரனூர் ஆற்றுப்பாலத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணி: வாகன ஓட்டிகள் அவதி


கீரனூர் ஆற்றுப்பாலத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணி: வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 8 Jun 2018 10:45 PM GMT (Updated: 8 Jun 2018 7:34 PM GMT)

கீரனூர் ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கீரனூர், 

பழனியை அடுத்த கீரனூர் சண்முகநதி ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் கடந்த 2007-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்தது. இதையடுத்து பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் இரவு வேளையில் அப்பகுதியில் விபத்துகளும் ஏற்பட தொடங்கின.

இதையடுத்து பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாலத்தை சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த மாதம் சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக சேதமடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியது.

அதன் பின்னர் என்ன காரணத்தாலோ தடுப்புச்சுவர் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story