மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் நின்ற பாசஞ்சர் ரெயில்


மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் நின்ற பாசஞ்சர் ரெயில்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:00 PM GMT (Updated: 8 Jun 2018 7:34 PM GMT)

கொடைரோட்டில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நடுவழியில் பாசஞ்சர் ரெயில் நின்றது.

கொடைரோடு, 

நெல்லையில் இருந்து ஈரோடு, மயிலாடுதுறைக்கு தினமும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு காலை 11 மணிக்கு நேற்று வந்தது. ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் ரெயிலை நிறுத்த என்ஜின் டிரைவர் முயன்றார். ஆனால் பிளாட்பாரத்தில் பாதி தூரம் வந்தவுடன் நடுவழியில் திடீரென ரெயில் நின்று விட்டது.

அதற்கு மேல் ரெயிலை இயக்க முடியாமல் டிரைவர் தவித்தார். இதனால் என்ஜினில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதிய அவர், இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை சோதனை செய்தனர்.

அப்போது, தண்டவாளத்துக்கு மேலே செல்லும் வயரில் இருந்து என்ஜினுக்கு மின்சாரம் கிடைக்காமல் தடைபட்டிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு மின்சார வினியோகம் சீரமைக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து ரெயில் நகர்ந்து பிளாட்பாரத்தில் வந்து நின்றது. காலை 11.45 மணிக்கு அங்கிருந்து ரெயில் புறப்பட்டு திண்டுக்கல் நோக்கி சென்றது. இதனால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே ரெயில் நின்றதையடுத்து அதன் அருகே இருந்த அம்மாபட்டி ரெயில்வே மூடியே இருந்தது. ரெயில்பெட்டிகள் கேட்டை தாண்டி நின்றதால் கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அம்மாபட்டி, உச்சணம்பட்டி, மாவுத்தன்பட்டி, சங்கராபுரம், நரியூத்து, பொம்மணம் பட்டி செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இதனால் அவர்கள் மாற்று பாதை வழியாக சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டடது.

Next Story