பரமக்குடி ரெயில் நிலையத்தில் செயல்படாமல் கிடக்கும் தொடுதிரை எந்திரம்


பரமக்குடி ரெயில் நிலையத்தில் செயல்படாமல் கிடக்கும் தொடுதிரை எந்திரம்
x
தினத்தந்தி 9 Jun 2018 3:00 AM IST (Updated: 9 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி ரெயில் நிலையத்தில் செயல்படாமல் கிடக்கும் தொடுதிரை எந்திரத்தை சரிசெய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி,

பரமக்குடி ரெயில் நிலையம் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே பிரதான ரெயில் நிலையம் ஆகும். வணிகர்கள், தொழிலாளர்கள் அதிகஅளவில் இருப்பதால் இந்த ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி இருக்கும். இதையடுத்து பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையத்தில் தொடுதிரை எந்திரம் அமைக்கப்பட்டது. தொடக்க காலத்தில் நன்றாக இயங்கி வந்த அந்த எந்திரம் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.

இதனால் ரெயில் பயணிகள் ரெயில் வரும் இடம், புறப்படும் நேரம், முன்பதிவு விவரம், ரெயில் கால அட்டவணை, கட்டண விவரம் போன்ற விவரங்களை அறிய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்களை நாட வேண்டிய நிலை உள்ளது.

இதுதவிர அதன் அருகில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரமும் செயல்படாமல் கிடக்கிறது. இதனால் டிக்கெட் எடுக்க அந்த எந்திரத்தை நாடும் பயணிகள் அதிருப்தியுடன் மீண்டும் வரிசையில் நின்று கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்து செல்கின்றனர். கடைசி நேரத்தில் அவசரமாக வரும் பயணிகள் எந்திரம் செயல்படாததால் டிக்கெட் எடுக்காமலேயே ரெயிலில் பயணம் செய்யும் நிலையும், பரிசோதனையின்போது அபராதத்துடன் டிக்கெட் வாங்கும் நிலையும் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

பயணிகளின் வசதிக்காகவும், அவசர காலத்திற்கு ஏதுவாகவும் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற எந்திரங்கள் ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் இருப்பது ரெயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு செயல்படாமல் உள்ள எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story