கச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் பகுதியில் கடந்த மாதம் 28–ந் தேதி சுமன் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்தில் உள்ளவர்களை சரமாரியாக வெட்டினர். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், மருதுபாண்டி, சந்திரசேகர் ஆகிய 3 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சுமன் உள்ளிட்ட 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மீதி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தம் இல்லாத மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்வதாக கூறி அக்கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் கைது சம்பவ நடவடிக்கைக்கு பயந்து இப்பகுதி கிராமத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் தலைமறைவாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆவாரங்காடு கிராமத்தில் தற்போது முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் மட்டுமே உள்ளனர். கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கச்சநத்தம் கிராம மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து இந்த பிரச்சினையை மீண்டும் பெரிதாக்கி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ஆவாரங்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஆவாரங்காட்டை சேர்ந்த வக்கீல் கார்த்திகைராஜா கூறியதாவது:– தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடன் சரண் அடைந்தவர்கள் மாரநாடு, திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர்கள். ஆனால் போலீசார் ஆவரங்காடு கிராமத்தில் பள்ளி மாணவர்களை கூட இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மேலும் எங்கள் கிராமத்தில் படிக்கும் 10–ம் வகுப்பு மாணவனை கூட போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து சிறையில் அடைத்துஉள்ளனர். ஆவாரங்காடு கிராமத்தினுள் புகுந்து போலீசார் தொடர்ச்சியாக கைது செய்வதையடுத்து அங்கு வசிக்கும் ஆண்கள் பலர் தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை போலீசார் நன்கு விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.