காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி குழாய்களை உடைக்கும் மர்ம நபர்கள்


காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி குழாய்களை உடைக்கும் மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 8 Jun 2018 9:45 PM GMT (Updated: 8 Jun 2018 8:10 PM GMT)

காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் குழாய்களை மர்ம நபர்கள் உடைத்து வருகின்றனர். அவர்களை கண்காணித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் ரூ.120கோடி மதிப்பீட்டில் தற்போது காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக காரைக்குடி நகரில் அண்ணாநகர், காவலர் குடியிருப்பு பகுதி, சூடாமணிபுரம், ரெயில்வே ரோடு, சுப்பிரமணியபுரம், செஞ்சை, முத்துப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுஉள்ளன.

சில இடங்களில் குழாய்கள் முழுமையாக பதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆங்காங்கே ஜே.சி.பி.எந்திரம் மூலம் குழிகள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடி அண்ணாநகர் காவலர் குடியிருப்பு பகுதி, சுப்பிரமணியபுரம் 4–வது வீதி பகுதி உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த குழாய்களை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மற்றும் குடிமகன்கள் கீழே தூக்கி போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.

இதனால் சில குழாய்கள் தரையில் நொறுங்கி அவற்றை பயன்படுத்தமுடியாமல் போகிறது. சுப்பிரமணியபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் குடிமகன்கள் இரவு நேரத்தில் குடித்து விட்டு காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகளை போட்டுவிட்டு செல்கின்றனர். சிலர் குழாய்களை தரையில் தூக்கி போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குழாய்கள் பதிக்கும் பணி தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே இரவு நேரத்தில் இந்த பகுதியில் கூடுதலாக போலீசார் ரோந்து சென்று கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story