மாவட்ட செய்திகள்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் + "||" + Water falls on all the waterfalls in the court Tourists are enthusiastic baths

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சாரல் மழை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. சீசன் தொடங்கிய 4 நாட்கள் கழித்து, சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

இதற்கிடையே குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலும் அடிக்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆனந்த குளியல்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கினாலும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மெயின் அருவியை போன்று பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அருவிக்கரை சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. அப்படி இருந்தும் அருவியில் விழும் தண்ணீரின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் ஐந்தருவிக்கு வந்து செல்கின்றனர்.

சீசன் களை கட்டும்

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் இன்னும் ஒருசில நாட்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும் என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

இருந்தாலும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

களக்காடு தலையணை

இதேபோல் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு மலையில் உள்ள தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அங்குள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இதமான சூழ்நிலை நிலவுவதால் தலையணைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நாகர்கோவில், உவரி, மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஓரமாக நின்று குளித்தனர். இதேபோல் களக்காட்டில் உள்ள நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.