காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி


காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 8:33 PM GMT)

காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீனிவாஸ், புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு ராகுல்காந்தி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இளைஞர் காங்கிரசில் இருந்தவர்கள் முதல்–அமைச்சராகவும், மத்திய மந்திரிகளாகவும், எம்.எல்.ஏ.க்கள் ஆக உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

புதுவையில் உள்ள பாரதீய ஜனதாவினர் நமக்கு சவால் விடுகின்றனர். இதற்கு காரணம் மத்தியில் ஆளும் ஆட்சி இருப்பது தான். தற்போது பாரதீய ஜனதாவின் செல்வாக்கு சரியத்தொடங்கி உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள கவர்னர் கிரண்பெடி மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். ஆனாலும் இந்த தடைகளை கடந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்தால் பாரதீய ஜனதா கட்சி காணாமல் போய்விடும். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நிற்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்கு இளைஞர் காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும். தொகுதி வாரியாக உறுப்பினர்களை அதிகளவு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story