கிருஷ்ணகிரி அணையில் தற்காலிக ‘ஷட்டரை’ அகற்றும் பணி தொடங்கியது


கிருஷ்ணகிரி அணையில் தற்காலிக ‘ஷட்டரை’ அகற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 Jun 2018 4:15 AM IST (Updated: 9 Jun 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ‘ஷட்டரை’ அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் உள்ள பிரதான முதல் மதகில் உள்ள ‘ஷட்டர்’ கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதனால் 10 அடிக்கும் மேல் தண்ணீர் வீணாக வெளியேறியது. இதன் காரணமாக அணையில் ரூ.30 லட்சம் மதிப்பில் 12 அடி உயரத்திற்கு தற்காலிகமாக ‘ஷட்டர்’ அமைக்கப்பட்டது. இதன் காரணமாக 52 அடியாக இருந்த கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணையில் உள்ள 8 மதகுகளையும் மாற்றி புதிய மதகுகள் பொருத்த வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 8 மதகுகளும் மாற்றப்பட்டு புதிய மதகுகள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக வருகிற தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஷட்டரை அகற்றி விட்டு 20 அடி உயரத்தில் புதிய ஷட்டர் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

இதற்காக திருச்சியில் இருந்து புதிய ‘ஷட்டர்’ அமைப்பதற்கான இரும்பு தளவாட பொருட்கள், ஷட்டரின் பக்கவாட்டில் பொருத்த கூடிய ரோலர்கள் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து நேற்று காலை தற்காலிக ‘ஷட்டர்’ அகற்றும் பணிகளும், புதிய ‘ஷட்டர்’ பொருத்தும் பணிகளும் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை கலெக்டர் கதிரவன் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வளம்) நடராஜன், உதவி பொறியாளர் சையத் ஜகரூதீன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது.

கிருஷ்ணகிரி அணையில் 12 அடி உயரத்தில் உள்ள தற்காலிக ‘ஷட்டர்’ அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் முடிவடையும். இதைத்தொடர்ந்து 40 அடி அகலத்தில் 20 அடி உயரத்தில் புதிய ‘ஷட்டர்’ பொருத்தும் பணிகள் தொடங்கப்படும்.

இந்த பணியில் பொறியாளர்கள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட உள்ளனர். ‘ஷட்டர்’ பொருத்தும் பணிகளை 25 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் மழை, காற்றின் வேகத்தை பொருத்து, பணிகள் முடிவதில் ஓரிரு நாட்களில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய ‘ஷட்டர்’ அமைத்த பின்பு, முழு கொள்ளளவான 52 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது தற்காலிக மதகில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளை கியாஸ் ‘வெல்டிங்’ மூலம் வெட்டி எடுக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரும்புகள் 3 முதல் 5 பாகங்களாக வெட்டப்பட்டு, ‘கிரேன்’ மூலம் வெளியே எடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று வினாடிக்கு 1,053 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து இடது மற்றும் வலது பாசன கால்வாய்கள் மூலமாக 2 ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 31.10 அடியாகும்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story