மாவட்ட செய்திகள்

‘எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வீரர்களாக திகழ வேண்டும்’ + "||" + Facing the challenges To be heroes

‘எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வீரர்களாக திகழ வேண்டும்’

‘எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வீரர்களாக திகழ வேண்டும்’
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வீரர்களாக திகழ வேண்டும் என்று ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை துணை தளபதி கரம்பீர்சிங் கூறினார்.
அரக்கோணம்,

அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இந்த மையத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியும் உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


நேற்று 90-வது பிரிவில் ஹெலிகாப்டர் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள், 6-வது பிரிவில் சிறியரக விமானம் (டோர்னியர்) பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் உள்பட 11 பேருக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது. ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதள கமாண்டர் டி.வி.சுனில் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு பிராந்திய கடற்படை துணை தளபதி கரம்பீர்சிங் கலந்துகொண்டு, திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் விஷ்ணு எஸ்.மேனனுக்கு கேரளா கவர்னரின் சுழற்கோப்பையும், லெப்டினன்ட்டுகள் சாகல் மதன், அமீத்சிங் ஆகியோருக்கு கோப்பையும் வழங்கப்பட்டது. விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை துணை தளபதி கரம்பீர்சிங் பேசியதாவது.

கடற்படை விமானத்தளத்தில் பயிற்சியை நிறைவு செய்து உள்ள வீரர்களையும், இந்த பணிக்கு உங்களை அனுப்பி வைத்த உங்களின் பெற்றோர்களையும் பாராட்டுகிறேன். 21 வாரங்கள் உங்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியை நிறைவு செய்து உள்ள நீங்கள் நாட்டின் பாதுகாப்பு பணியில் பயிற்சி நுணுக்கங்களை வெளிப்படுத்த வேண்டும்.

இந்திய கடற்படையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். எத்தகைய சவால்களையும் வீரர்கள் எளிதாக எதிர்கொள்ளும் திறமை படைத்தவர்களாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் போது 3 ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் மக்கள் தொடர்பு அலுவலர்கள் நிரஞ்சனா, சுரேஷ்குமார், ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தள அதிகாரிகள், வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், பயிற்சியை நிறைவு செய்த வீரர்களின் உறவினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.