மாவட்ட செய்திகள்

மேடையில் மின்னும் பெண்! + "||" + Girl shining on stage

மேடையில் மின்னும் பெண்!

மேடையில் மின்னும் பெண்!
நாடகக் கலையில் அசாதாரண திறமையை வெளிப்படுத்தியதற்காக ஜனாதிபதி விருது பெற்றிருப்பவர், கஷீஷ்.
டெல்லியைச் சேர்ந்த சிறுமியான கஷீஷ், சலாம் பாலக் டிரஸ்ட் என்ற ஆதரவற்றோருக்கான அமைப்பின் பராமரிப்பில் இருப்பவர். அந்த அமைப்பு நடத்திய ‘ஷெரோஸ்’ என்ற நாடகத்தில் ‘ரோசி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காகத்தான் கஷீஷுக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது.


இவருக்கு 6 வயதாக இருக்கும்போது ஒரு கைவிடப்பட்ட குழந்தையாக மேற்கண்ட அமைப்பில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். எட்டு வயதில், ‘ஐ ஆரிஜின்ஸ்’ என்ற நாடகத்தில் நடிப்பதற்கான ஒத்திகையில் பங்கேற்றார். அதில் தேர்வு பெற்று, தெருத்தெருவாக அலைந்து திரியும் ஆதரவற்ற சலோமினா என்ற பெண்ணாக கஷீஷ் நடித்தார்.

தற்போது சலாம் பாலக் அமைப்பின் ஆதரவற்றோர் இல்லத்தில் வேறு 80 பெண் குழந்தைகளுடன் ஒன்றாகத் தங்கியிருக்கும் கஷீஷ், அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

‘‘நான் இந்த இல்லத்துக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. என்னை என் அம்மா எப்போதாவது இங்கு வந்து என்னை சந்தித்துப் போவார். ஆனால் அவரது பெயர்கூட எனக்குத் தெரியாது’’ என்று சொல்லும் கஷீஷ், தான் விருது பெற்ற செய்தியைக் கூட தனது அம்மாவுக்குச் சொல்ல முடியவில்லை என்கிறார் சோகமாக.

கஷீஷ் நடித்த ரோசி கதாபாத்திரம், தன்னுடைய உரிமைக்காகவும், தன்னைப் போன்ற பிற சிறுமி களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. அந்த நாடகத்தின் நிறைவில், பஞ்சாபைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர் பாஷின் வரிகளை கஷீஷ் முழங்கிய விதம் அவருக்கு பாராட்டுகளை அள்ளித்தந்தது.

ஒரு பெண்ணின் பெரிய பலம் அவளின் குரல்தான், தனது உரிமைகளுக்காக குரல் எழுப்ப என்றும் அவள் தயங்கக்கூடாது என்று தனது கதாபாத்திரம் மூலம் கஷீஷ் வெளிப்படுத்தினார்.

சலாம் பாலக் டிரஸ்டின் நாடகப் பிரிவு இயக்குநரான பங்கஜ், ‘‘கஷீஷிடம் சிறுவயதிலேயே நடிக்கும் துடிப்பு வெளிப்பட்டது’’ என்கிறார்.

அதற்கேற்ப, நடிப்பைத் தொடரவும், அதன் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானும் இவ்வுலகைப் புரிந்துகொள்ளவும் கஷீஷ் ஆசைப்படுகிறார்.

‘‘நான் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். காரணம், அதுதான் என்னை இந்த உலகை மேலும் புரிந்துகொள்ள வைக்கிறது. நாங்கள் நடத்தும் நாடகங்கள் மூலம் நான் ஆண்களைப் புரிந்துகொள்கிறேன். அது எனக்குத் தன்னம்பிக்கை தருகிறது, தைரியசாலி ஆக்குகிறது’’ என்று பேசிக் கொண்டே போகும் கஷீஷின் கண்கள் நம்பிக்கையில் ஜொலிக்கின்றன.

கூடுதல் தகவல்: இளம் நாடகக் கலைஞர் கஷீஷுக்கு பேய்க் கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்!