நீதிபதி பணிக்கான தேர்வை நெல்லையில் 937 பேர் எழுதினர் தேர்வு மையத்தில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வை நெல்லையில் 937 பேர் எழுதினர். பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வை நெல்லையில் 937 பேர் எழுதினர். பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி பணிக்கு எழுத்து தேர்வுதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உரிமையியல் நீதிபதி பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத பாளையங்கோட்டை மேரிசார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் கல்லூரி, மேக்தலின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆதித்யா வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
4 தேர்வு மையங்களிலும் தேர்வு எழுத 986 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 937 பேர் தேர்வு எழுதினர். 49 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுத சென்றவர்களை போலீசார் சோதனை செய்தனர். பறக்கும் படையினர் தேர்வு அறையை சோதனையிட்டனர். தேர்வு மையத்துக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் பார்வையிட்டனர்நெல்லையில் உள்ள 4 மையங்களில் நடந்த எழுத்து தேர்வை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பஷீர்அகமது, சுந்தர், ஐகோர்ட்டு பதிவாளர் தங்கமாரியப்பன், கலெக்டர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பின்னர் நெல்லை கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் உரிமையியல் நீதிபதி போட்டி தேர்வினை கண்காணிக்க தாசில்தார் நிலையில் உள்ள ஒரு சுற்றுக்குழு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்வு மையங்களில் தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. மின்சாரம் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் அருள்முருகன், ஜெயராஜ், சமரச தீர்வு மைய நீதிபதி டி.ராஜசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவு கலெக்டர் மைதிலி ஆகியோர் உடன் இருந்தனர்.
மயங்கி விழுந்த பெண்இதற்கிடையே பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு வலிப்பு நோய் இருந்தது தெரிய வந்தது.
இதை நேரில் பார்த்த கலெக்டர் ஷில்பா, ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி டீன் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர், உடனே மருத்துவக்குழுவை அனுப்பி வைத்தார். மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அந்த பெண் இயல்பு நிலைக்கு வந்தார். அதன்பிறகு 15 நிமிடம் தாமதமாக அந்த பெண் தேர்வு எழுதினார். இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பேசி அந்த பெண் கூடுதல் நேரம் தேர்வு எழுத கலெக்டர் அனுமதி பெற்று கொடுத்தார்.