மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை
x
தினத்தந்தி 9 Jun 2018 9:30 PM GMT (Updated: 9 Jun 2018 6:43 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி, 

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே சீசன் தொடங்கி விட்டது. ஆனாலும் அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. இதனால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குளிக்க தடை

நேற்று முன்தினம் இரவு முழுவதும் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலையில் இருந்தே பலத்த சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. அதிலும் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுவதாலும், ஐந்தருவியிலும் அதிக தண்ணீர் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அப்படி இருந்தும் தண்ணீர் விழும் அழகை ரசிப்பதற்காகவே இந்த அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

2 அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பழைய குற்றாலம், புலியருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு அவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

குளிர்ந்த காற்று

குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இடை இடையே வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது.

சீசன் களை கட்ட தொடங்கி விட்டதால் இன்னும் சில நாட்களில் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story