மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் ஆர்.நல்லக்கண்ணு பேட்டி


மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2018 5:00 AM IST (Updated: 10 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.

காரமடை,

காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜென்னீஸ் சொசைட்டி மற்றும் வெள்ளியங்காடு பொதுமக்கள் சார்பில் படுக்கைகள், நாற்காலிகள், மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட குழு செயலாளர் ஆர்.மூர்த்தி தலைமை தாங்கினார்.

ஜென்னீஸ் சொசைட்டி தலைவர் பி.பி.சிவசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜப்பன், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, பெங்களூரு ஜெயந்ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளியங்காடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபாகரனிடம் படுக்கைகள், நாற்காலிகள், மின்விசிறிகள் வழங்கினார்கள். இதில், கோவை மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், ஆகியோர் பேசினர். முடிவில் ஜென்னிஸ் சொசைட்டி பொருளாளர் புஜ்ஜிங்கன் நன்றி கூறினார்.

இதையடுத்து ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள குவாரிகள் கொள்ளை காடுகளாக மாறியுள்ளது. இதனால் 33 ஆற்று படுகைகளும் பாலைவனமாக மாறியுள்ளது. காவிரி ஆற்றங்கரையில் மட்டும் 10 லட்சம் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. ஆனால் அதிகமான ஆறுகள் ஓட கூடிய ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் எந்திரங்களின் மூலம் மணல் எடுக்க தடை செய்துள்ளனர். இதே போன்று தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை என்பதை ஆணையமாக எதற்காக மாற்றினார்கள். தமிழகத் திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைந்திருந்தாலும் உத்தரவாதம் இருந்தால் நாம் ஒப்புக்கொண்டோம். ஆனால் அதை உடனடியாக செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது.

வருகிற 12–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டம் வறட்சியில் இருந்து விடுபட்டு குறுவைக்கு தயாராகும். இல்லை என்றால் தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story