நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுக்கூட்டம்: மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு


நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுக்கூட்டம்: மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2018 2:30 AM IST (Updated: 10 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது என்று நெல்லையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை, 

மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது என்று நெல்லையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை தாலுகா குழு சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி, தாலுகா செயலாளர் சுடலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம் வரவேற்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–

மத்திய அரசுக்கு ஆதரவாக...

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்களை சிரமப்படுத்துகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுகிறது.

மாற்று கொள்கையை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 6 முனையில் இருந்து பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார இயக்கங்கள் வருகிற 15–ந் தேதி திருச்சியில் சேருகிறது. அங்கு பிரமாண்ட முறையில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகூடங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து விட்டது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், அந்த பள்ளிக்கூடங்களை மூடுவதிலேயே அரசு குறியாக உள்ளது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.

கேரள மாநிலத்தில் அரசு பள்ளிக்கூடங்கள் சர்வதேச தரத்தில் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கு நேர்மாறாக தமிழக அரசு செயல்படுகிறது. இதுபோன்ற நிலைகளை மாற்றுவதற்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரசார இயக்கத்தை தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நிவாரணம் வழங்க வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பொது மக்களின் போராட்டத்துக்கு பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையின் அடிப்படையில் ஆலையை மூடுவதாக அரசு அறிவித்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு.

தூத்துக்குடியில் சுற்றுச்சுழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. காற்றில் எந்த அளவு நச்சுத்தன்மை கலந்துள்ளது என்பது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எந்தந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அரசு கணக்கெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story