விழுப்புரத்தில் பள்ளி முதல்வர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகைகள் கொள்ளை


விழுப்புரத்தில் பள்ளி முதல்வர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 7:07 PM GMT)

விழுப்புரத்தில் தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள விவேகானந்தா நகரில் வசித்து வருபவர் கோபால் (வயது 47). இவர் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபால் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ஒரு சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.

அங்கு படம் முடிந்ததும் நள்ளிரவு 1.30 மணியளவில் மீண்டும் கோபால் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த 200 கிராம் எடையுள்ள வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோபால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி குத்து விளக்குகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.3¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story