பிரதமர் மீதான கொலைமிரட்டல் தகவல் தேர்தல் ஆதாயத்திற்காக வெளியிடப்படவில்லை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


பிரதமர் மீதான கொலைமிரட்டல் தகவல் தேர்தல் ஆதாயத்திற்காக வெளியிடப்படவில்லை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2018 11:30 PM GMT (Updated: 9 Jun 2018 7:25 PM GMT)

பிரதமர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவல் என்பது தேர்தல் ஆதாயத்திற்காக அல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜ.க. வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக பிரதமர் மோடியை ராஜீவ்காந்தியை போன்று கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் பின்னனியில் பல்வேறு பயங்கரவாத சக்திகளும், மேல்நாட்டு சக்திகளும் உள்ளதாக அறிய முடிகிறது. பிரதமர் மீதான கொலைமிரட்டல் தகவல் என்பது தேர்தல் ஆதாயத்திற்காக வெளியிட்டதாக கூறுவது தவறு. பிரதமர் மோடிக்கு வந்துள்ள மிரட்டல் இந்த நாட்டிற்கு வந்துள்ள கொலைமிரட்டல். எனவே, இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தமிழை முன்னிலைபடுத்தி தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரிலும், இன்னும் பல பெயரிலும் செயல்படும் பயங்கரவாதிகள் அதிக பலம் பெற்று வருகின்றனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயக்குனர் அமீர் கோவையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எந்த தொழிலும் தொடங்க கூடாது என்று திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் தொழில் துறையில் பின்னோக்கி சென்றுள்ளது.

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று பிரதமர் எந்த சமயத்திலும் தெரிவிக்கவில்லை. இது ராகுல்காந்தி கூறிய கருத்து. அவரிடம் தான் மக்கள் பணம் கேட்க வேண்டும். எஸ்.வி.சேகரை கைது செய்வது குறித்து தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் மத்திய உளவுத்துறையால்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில காவல்துறையால் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் முரளிதரன், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாநில துணை தலைவர்கள் குப்புராமு, நாகராஜன், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட துணை தலைவர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைதொடர்ந்து ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.


Next Story