தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தக்கூடாது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தக்கூடாது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2018 4:45 AM IST (Updated: 10 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தக்கூடாது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் புலியூரில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்கலைக்கழக பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு ஆட்படுத்த முயன்ற விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷனை கவர்னர் நியமித்தார். ஆனால் அந்த விசாரணை கமிஷன் எந்த வகையில் உண்மையை கண்டறிந்தது? என்பது இன்னும் புலப்படவில்லை. தமிழக கவர்னருக்கும், நிர்மலாதேவிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தெளிவாக தெரியவில்லை. முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது இது போன்ற குற்றச்சாட்டு எழுந்தபோது சோனியாகாந்தி உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கினார். அதுபோல் இங்கேயும் (தமிழகம்) மோடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவேளை நிர்மலாதேவியுடனான தொடர்பு குறித்த செயல் உண்மையெனில் கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

மாவோயிஸ்டுகள் யாரை கொல்ல முயற்சி செய்தாலும் அது தவறு தான். அவர்களை அடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மாணவர்களின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது. தமிழக காங்கிரசில் மாற்றம் ஏதும் ஏற்படுமாயின் அதனை ராகுல்காந்தி அறிவிப்பார். அவர் யாரை வேண்டுமானாலும் புதிய தலைவராக நியமிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சின்னசாமி, நகர தலைவர் ஸ்டீபன்பாபு, மாநில நிர்வாகி ஜோதிமணி உள்பட காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர். 

Next Story