கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:45 PM GMT (Updated: 9 Jun 2018 7:29 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பு சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பில் பழைய ஓய்வதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், பள்ளி கல்வித்துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதை கைவிட வேண்டும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப்சேவியர், தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் ராம்குமார், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜேசுராஜ், மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் பீட்டர் ராஜா, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜேம்ஸ்குமார், மேல்நிலைபள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன், தமிழாசிரியர் கழக பொதுச் செயலாளர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story