நின்றபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்த பெண்: உலக சாதனைக்கு முயற்சி
நீலகிரியைச் சேர்ந்த சைபி மேத்யூ என்ற பெண் இயற்கையோடு பெண்மையை இணைந்தே காப்போம் என்ற பெயரில் நின்றபடி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுவருகிறார்.
தேனி,
நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்த தாமஸ் மனைவி சைபி மேத்யூ (வயது 45). இவர், இயற்கையோடு பெண்மையை இணைந்தே காப்போம் என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளை நின்றபடி ஓட்டிச் சென்று இந்த பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். உலக சாதனைக்கான முயற்சியாகவும் இதை செய்து வருகிறார். நேற்று தேனிக்கு வந்த சைபி மேத்யூ புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். அப்போது அவரிடம் கேட்ட போது, “எனது கணவர் விவசாயம் செய்து வருகிறார். நான் தையல் தொழில் செய்து வருகிறேன். எனக்கு ரித்தின் என்ற மகனும், ரோஸ்மேரி என்ற மகளும் உள்ளனர். இயற்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக சாதனை படைக்கவும் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். கடந்த 6-ந்தேதி ஊட்டியில் பயணத்தை தொடங்கினேன். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல் வழியாக தேனிக்கு வந்துள்ளேன். இங்கிருந்து உசிலம்பட்டி, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி செல்கிறேன். அங்கிருந்து புதுச்சேரி சென்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக 13-ந்தேதி சென்னைக்கு செல்ல உள்ளேன். டெல்லியில் உள்ள ‘பெஸ்ட் ஆப் இந்தியன் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பு இதை உலக சாதனையாக அங்கீகரிக்க உள்ளது. இந்த பயணத்தை தொடர்ந்து தமிழக அளவில் இயற்கை ஆர்வலர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து இயற்கையை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளேன்” என்றார்.
Related Tags :
Next Story