அதிவேகமாக சென்றதால் மண் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்
ஊத்துக்குளி அருகே அதிவேகமாக சென்றதால் மண் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சென்னிமலை–காங்கேயம் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக நேற்று மண் ஏற்றிக்கொண்டு 10–க்கும் மேற்பட்ட லாரிகள் அதிவேகமாக சென்றன.
இதை பார்த்த பொதுமக்கள், அந்த லாரிகளை மறித்து, அவற்றை சிறைபிடித்தனர். மேலும், அந்த சாலையில் அவர்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துரைசாமி, மண்டல துணை தாசில்தார் நந்தகோபால், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அதிகாரி பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, ‘கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லாத கிராமப்புற சாலையில் இந்த லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். உடனே, இனிமேல் பொதுமக்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாதவாறு லாரிகளை இயக்குவதாக லாரி டிரைவர்கள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.