சமூக ஆர்வலர் என்று கூறி தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது
சமூக ஆர்வலர் என்று கூறி தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டதால் பெருந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முல்லை நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 47). தொழில் அதிபர். டிப்பர் லாரிகள், பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களும் செய்து வருகிறார். இந்தநிலையில் பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோட்டை சேர்ந்த சின்னசாமி என்பவருடைய மகன் நந்தகுமார் (38) சந்திரசேகரனை அடிக்கடி அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தன்னை ஒரு சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு நீங்கள் செய்யும் பல தொழில்களில் தவறு உள்ளது. முறை தவறி செய்கிறீர்கள். இதை நான் வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டினார். ஆனால் சந்திரசேகரன் அவருடைய அழைப்பை தவிர்த்து வந்தார்.
நந்தகுமாரும் விடாமல் அடிக்கடி சந்திரசேகரனை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டிவந்தார். கடைசியில் ரூ.5 லட்சமாவது கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் நந்தகுமார் பேசும்போதெல்லாம் அந்த உரையாடலை சந்திரசேகரன் செல்போனில் பதிவு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெருந்துறை வெள்ளோடு ரோட்டில் அய்யர்குளம் என்ற இடத்தில் சந்திரசேகரன் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது எதிரே நந்தகுமாரும், அவருடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் வந்தார்கள். உடனே நந்தகுமார் சந்திரசேகரனை மறித்து எனக்கு உடனே பணம் வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதுபற்றி சந்திரசேகரன் பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நந்தகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்திரசேகரன் தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த உரையாடலையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர் வேறு வழியின்றி நந்தகுமார் பணம் கேட்டு சந்திரசேகரனை மிரட்டியதை ஒப்புக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.
நந்தகுமார் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளன. தன்னை ஒரு சமூக ஆர்வலர் என்றும், முக்கிய பிரமுகர்களுடன் பழக்கம் உள்ளது என்று கூறியும் தொழில் அதிபர்களிடம் கைவரிசை காட்டியுள்ளதாக தெரிகிறது. அதனால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தால் அவர் செய்த மோசடிகள் வெளியே வரும் என்று கூறப்படுகிறது.