கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மெத்தனம்


கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மெத்தனம்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 7:55 PM GMT)

ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மதுரை,

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தென்மாநிலங்களுக்கான ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது கிடையாது. இதற்கிடையே, பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான வி‌ஷயங்களில் கூட மத்திய அரசு மெத்தனமாக இருந்து வருகிறது. அதாவது, தண்டவாள பராமரிப்பு பணிக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம்.

இந்த பணிகளுக்கு அந்தந்த கோட்ட ரெயில்வேயில் உள்ள வருமானத்தை கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதி ஒவ்வொரு வருடமும் 5 சதவீதம் அதிகரிக்கப்படும். இந்த கூடுதல் தொகையை ஒதுக்க கோட்ட அளவில் நிதி இல்லையெனில் ரெயில்வே அமைச்சகம் பற்றாக்குறை நிதியை தரும். ஆனால், கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்த நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தண்டவாள பராமரிப்பு பணிக்கு நிதியை ஒதுக்காமல் வெவ்வேறு பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கக்கூடிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நேரடியாக நிதி ஒதுக்காமல் மத்திய தொலைதொடர்புத்துறைக்கு மறைமுகமாக ஒதுக்கியுள்ளது.

கடந்த 2016–17 நிதியாண்டில் தொலைதொடர்புத்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும் தண்டவாள பராமரிப்பு பணிகளையும் ரெயில்வே நிர்வாகங்கள் முறையாக மேற்கொள்வதில்லை. அகல ரெயில்பாதை தண்டவாளங்களை 10 வருடங்களுக்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும்.

ஆனால், மதுரை ரெயில்வே கோட்டத்தில் மதுரை–தூத்துக்குடி, நெல்லை இடையே உள்ள தண்டவாளங்களை 13 வருடங்களாக பராமரிக்கவில்லை. பாலஸ்டிங், பேக்கிங் என சொல்லப்படும் இந்த பணி, தண்டவாளம் சரியாமல் இருப்பதற்காக தண்டவாளத்துக்கு இடையே உள்ள சரளைக்கற்களை சரி செய்யும் பணியாகும்.

இந்த நிலையில், தற்போது மதுரை–தூத்துக்குடி, நெல்லை இடையே இந்த பணிகள் நடந்து வருகிறது. அதாவது, 2014–ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய பணி 3 வருட தாமதத்துக்கு பின்னர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை–நல்லி ரெயில்நிலையம் இடையேயான 63 கி.மீ. பணிகள் ரூ.73 லட்சத்து 65 ஆயிரம் செலவில் செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து நல்லி–மணியாச்சி, மணியாச்சி–தூத்துக்குடி, நெல்லை இடையேயான பணிகள் ரூ.83.65 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இந்த பணிகளின் அவசியம் குறித்து ஒவ்வொரு வருடமும் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தும் ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படியே கொடுத்தாலும் அந்த பணத்தை வட்டியுடன் மத்திய அரசு வசூலித்து விடுகிறது. மேலும், ரெயில்வேயின் சொந்த வருமானத்தில் இருந்து மட்டுமே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.


Next Story