மாநில சாலைகள் பராமரிப்பு பணிக்கான டெண்டர் முடிவு செய்வதில் தாமதம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மாநில சாலைகள் பராமரிப்பு பணிக்கான டெண்டர் முடிவு செய்வதில் தாமதம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2018 10:00 PM GMT (Updated: 9 Jun 2018 7:55 PM GMT)

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள மாநில சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை பராமரிப்பதற்கான டெண்டர் முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழகஅரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மாநில சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் 600 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதர மாவட்ட சாலைகள் 1000 கிலோ மீட்டர் நீளம் உள்ளன. இந்த சாலைகளை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினரே பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். தற்போது தமிழக அரசு சாலைகள் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எடுத்ததன் பேரில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிக்கான டெண்டர் கோரப்பட்டது.

இச்சாலை பராமரிப்பு பணிக்கான டெண்டர் ரூ.550 கோடி மதிப்பிலானது என கூறப்படுகிறது. ஆனால் டெண்டர் மனு போட்டுள்ளவர்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட 2 சதவீதம் கூடுதல் தொகை கேட்டுள்ளதால் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்துள்ள போதிலும் நிதித்துறை அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் தர மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெண்டரை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மாநில சாலைகள் பராமரிப்பு பணிகள் முடக்கம் அடைந்துள்ளன.

தனியாரிடம் சாலை பராமரிப்பு பணி ஒப்படைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளதால் மாநில சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் இனி வரும் காலங்களில் தனியார் மூலம் பராமரிக்கப்படும். இதற்காக 5 வருட காலத்திற்கு ரூ.550 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. சாலைபராமரிப்பு தொடர்பாக பொதுமக்கள் தரும் கோரிக்கை மனுக்கள் அடிப்படையிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஆய்வறிக்கை அடிப்படையிலும் எந்தெந்த சாலைகளின் பராமரிப்பு பணிகளை எப்போது மேற்கொள்ள வேண்டும் என்ற விபரங்கள் டெண்டர் எடுக்கும் தனியாரிடம் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டாலும் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். எனவே தனியாரிடம் ஒப்படைத்தாலும் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏதும் இருக்காது. இதர மாவட்ட சாலைகளின் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினரே மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது உள்ள நிலையில் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள மாநில சாலைகள் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதால் தமிழக அரசு சாலைபராமரிப்புக்கான டெண்டரை முடிவு செய்து ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு கண்டு உடனடியாக இம்மாவட்டத்தில் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story