குழந்தை தொழிலாளர்கள் குறித்து போனில் தகவல் தெரிவிக்கலாம் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


குழந்தை தொழிலாளர்கள் குறித்து போனில் தகவல் தெரிவிக்கலாம் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:00 AM IST (Updated: 10 Jun 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை தொழிலாளர்கள் குறித்து போனில் தகவல் கொடுக்கலாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை,

குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு சுவர் ஓவியம் தீட்டும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தினை குழந்தை தொழிலாளர் அற்ற மாவட்டமாக மாற்ற குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை ரெயில் நிலையத்தில் அருகில் உள்ள உள்ள சுவரில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றது. இந்த ஓவியம் தீட்டும் பணியில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மற்றும் திருநகர் எம்.எம். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைபடுத்துதல் சட்டம் 1986–ன் கீழ் தண்டனை பெறுவார்கள். 14 வயது நிரம்பாத குழந்தைகளை அனைத்து விதமான பணிகளிலும், 18 வயது நிரம்பாத வளர்இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000 அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்கும்.

பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் மதுரை மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும். அதேபோல் பொதுமக்கள் இத்தகைய குழந்தை தொழிலாளர்கள் முறையை கண்டறிய நேரிட்டால் சைல்டு லைன் தொலைபேசி எண்–1098 அல்லது மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக தொலைப்பேசி எண் 0452–2604388 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் மத்திய அரசின் இணையதளமான www.pencil.gov.in வாயிலாக புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story