நயினார்கோவில் அருகே கணவன்–மனைவியை தாக்கி 15 பவுன் நகை பறிப்பு


நயினார்கோவில் அருகே கணவன்–மனைவியை தாக்கி 15 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2018 3:00 AM IST (Updated: 10 Jun 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் அருகே கணவன்–மனைவியை தாக்கி 15 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் அருகே உள்ள அ.காச்சான் கிராமத்தை சேர்ந்தவர் ராசு(வயது 57). இவருடைய மனைவி பூமயில். இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓட்டைப்பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ராசு மற்றும் அவரது மனைவியை தாக்கி 15 பவுன் நகைகளை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து ராசு அளித்த புகாரின்பேரில் நயினார்கோவில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ராசு கூறும்போது, நள்ளிரவு 1 மணியளவில் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது வீட்டுக்குள் 3 பேர் நின்றுகொண்டிருந்தார்கள். என்னை கண்டதும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து என்னை தாக்கினார்கள்.

பதிலுக்கு நான் அவர்களை தாக்க முயன்றபோது எனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பிடித்து அவரை தரதரவென பின்பக்கமாக இழுத்து சென்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிஓடி விட்டனர் என்று தெரிவித்தார். நயினார்கோவில் பகுதியில் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story