கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை
கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேம்பாட்டு பிரிவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக(தேர்தல்) பணிபுரிந்து வருபவர் சுகுமார். இவர் குமராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தபோது நிதி–நிர்வாகத்தில் முறைகேடு செய்ததாக அவர் மீது பல்வேறு புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வறட்சிக்காலங்களில் பஞ்சாயத்துகளில் ஆழ்துளை கிணறு அமைத்தது, குறிப்பிட்ட திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்கு ஒதுக்கியது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்கு அதிகாரிகள் அறிக்கை அனுப்பி வைத்தனர். அதன் பேரில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுகுமாரை பணி இடை நீக்கம் செய்து கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார்.