மேட்டூர் அணை திறப்பு இல்லை என கூறி தமிழக அரசு, விவசாயிகளை ஏமாற்றி விட்டது ஆ.ராசா குற்றச்சாட்டு


மேட்டூர் அணை திறப்பு இல்லை என கூறி தமிழக அரசு, விவசாயிகளை ஏமாற்றி விட்டது ஆ.ராசா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு இல்லை என கூறி தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டது என ஆ.ராசா குற்றம் சாட்டி உள்ளார்.

கும்பகோணம்,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. வட்ட செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சபாபதி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராசாராமன், நகர அவை தலைவர் செல்வராஜ், நகர துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், விசாலாட்சி, ராஜேஷ்குமார், நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு இல்லை என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். இதன் மூலம் தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கூறி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்கு உள்ளது? என தெரியவில்லை. இதனால் நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. நீட் தேர்வு பல உயிர்களை பலி வாங்கி விட்டது. தமிழக அரசிடம் நிர்வாக திறமை இல்லை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசார், இளம்பெண்ணின் வாயில் சுட்டனர். இதுபோன்ற சம்பவம் சுதந்திர போராட்ட காலத்தில் கூட நடந்தது இல்லை.

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா தனது சொத்துகளை பாதுகாப்பதற்காகவே சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோரை தன்னுடன் வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் மற்றும் ஜனநாயகத்தை ஜெயலலிதா படுகொலை செய்தது, மன்னிக்க முடியாததாகும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அன்பழகன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் தமிழழகன் ஆகியோரும்பேசினர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணம், ராமலிங்கம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார், தாமரைசெல்வன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் குமார் நன்றி கூறினார். 

Next Story