அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் கூடுதலாக 720 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை


அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் கூடுதலாக 720 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 8:27 PM GMT)

கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் கூடுதலாக மொத்தம் 720 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் இந்த கல்வி ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.152.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டு முதல் 68 இளங்கலை பாடப்பிரிவுகள், 60 முதுகலை பாடப்பிரிவுகள், 136 ஆய்வு பாடப்பிரிவுகள் என மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

இந்த கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க 683 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசிற்கு ரூ.68.46 கோடி செலவாகும். புதிய பாடப்பிரிவுகளுக்குரிய 324 வகுப்பறை கட்டிடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.62.75 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 ஆயிரத்து 524 பேர் கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். அடுத்த மாதம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. புதியதாக ஒரு பொறியியல் கல்லூரியை தொடங்கி நடத்த ரூ.113.18 கோடி தொடர் செலவினம் ஆகும். இவ்வாறு தொடங்கப்படும் புதிய பொறியியல் கல்லூரியில் 240 மாணவ-மாணவிகளை மட்டுமே சேர்க்க முடியும்.

கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே உள்ளது. இதனால் அந்த 3 கல்லூரிகளில் கூடுதலாக தலா 240 மாணவ-மாணவிகள் என மொத்தம் 720 மாணவ-மாணவிகளை 4 பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அனைத்து விதமான கல்லூரிகளிலும் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர வழிவகை செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளில் 1,321 பாடப்பிரிவுகளை தொடங்கி உள்ளது. கல்லூரிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 862 வகுப்பறைகளும், 172 ஆய்வகங்களும் கட்டப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். 

Next Story