காவிரி நதிநீர் ஆணையம் பல் இல்லாத அமைப்பு கொட்டும் மழையில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு


காவிரி நதிநீர் ஆணையம் பல் இல்லாத அமைப்பு கொட்டும் மழையில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2018 4:45 AM IST (Updated: 10 Jun 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் வந்தார். தொடர்ந்து, கொட்டும் மழையில் வடசேரியில் நடந்த தெருமுனைக்கூட்டத்தில் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் பல் இல்லாத அமைப்பு என கூறினார்.

நாகர்கோவில்,

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் நடந்துவரும் பிரசார பேரணி நேற்று மாலை 6 மணி அளவில் நாகர்கோவில் வடசேரியை வந்தடைந்தது. அதில் கலந்துகொண்டுள்ள அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு வடசேரி அண்ணா சிலை அருகே கொட்டும் மழையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மழைக்கு இடையே நடந்த தெருமுனை கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

வருகிற 14-ந்தேதி திருச்சியில் நடைபெறும் கட்சி மாநாட்டில் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசுகிறார். மத்தியில் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் பா.ஜனதா அரசு எல்லா துறைகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரி திட்டத்தின் காரணமாக ஏராளமான சிறுதொழில்கள் காணமால் போய்விட்டன.

தமிழகத்தில் 50 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், சுமார் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளார். மத்திய அரசின் எடுபிடியாகத்தான் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் எல்லாத்துறைகளில் ஊழல் மலிந்து கிடக்கிறது. சத்துணவு ஊழியர் நியமனத்தில் இருந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் வரை ஊழல் நடந்திருக்கிறது. காவிரி நதி நீர் ஆணையத்தை பொறுத்தவரையில், இன்று அது பல் இல்லாத அமைப்பாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை இனி யாராலும் திறக்கமுடியாது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகளே இல்லை என கூறுவது கேலிக்குரிய பேச்சு. ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் கைது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்வது மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் ஆகும். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பயணிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்லசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, திட்டுவிளை சந்திப்பில் தோவாளை வட்டார செயலாளர் மிக்கேல் தலைமையில், ஜி.ராமகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு நடந்த கூட்டத்தில் பேசினார்.

Next Story