புஷ்பகிரி மலையில் பயங்கரம் மாயமான கள்ளக்காதல் ஜோடி கொலை?; காரில் வைத்து உடல்கள் எரிப்பு போலீஸ் தீவிர விசாரணை


புஷ்பகிரி மலையில் பயங்கரம் மாயமான கள்ளக்காதல் ஜோடி கொலை?; காரில் வைத்து உடல்கள் எரிப்பு போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2018 4:00 AM IST (Updated: 10 Jun 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

புஷ்பகிரி மலையில் ஒரு ஆணும், பெண்ணும் கொலை செய்யப்பட்டு காரில் வைத்து அவர்களுடைய உடல்கள் எரிக்கப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

ஹாசன், 

புஷ்பகிரி மலையில் ஒரு ஆணும், பெண்ணும் கொலை செய்யப்பட்டு காரில் வைத்து அவர்களுடைய உடல்கள் எரிக்கப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் மாயமான கள்ளக்காதல் ஜோடியா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேக்கரி கடை உரிமையாளர்

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சமுத்திரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஷ்(வயது 25). இவர் உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதியில் சொந்தமாக பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். அதேப்பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(28). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

சந்தியா, கிரீசின் பேக்கரி கடைக்கு அருகே உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதுமட்டுமல்லாமல் சந்தியாவின் குடும்பத்தினரும், கிரீசின் குடும்பத்தினரும் நீண்ட கால குடும்ப நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தியாவும், கிரீசும் நெருங்கி பழகி வந்தனர். குடும்ப நண்பர்கள் என்பதால் இவர்களுடைய பழக்கத்தை யாரும் தவறாக நினைக்கவில்லை என்று தெரிகிறது.

தனிமையில் சந்தித்து உல்லாசம்

இந்த நிலையில் சந்தியாவுக்கும், கிரீசுக்கும் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும், பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கிரீஷ் தனக்கு சொந்தமான காரில் சந்தியாவை அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சந்தியாவும், கிரீசும் காணாமல் போயினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களுடைய குடும்பத்தினர், அவர்களை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள்?, என்ன ஆனார்கள்? போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தியாவை காணவில்லை என்று கார்கலா போலீசிலும், கிரீசை காணவில்லை என்று பேளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா ஹலேபீடு அருகே உள்ள புஷ்பகிரி மலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த அப்பகுதியினர், உடனடியாக அதுபற்றி ஹலேபீடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது எரிந்து கொண்டிருந்த காரில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் உடல் இருந்தது. அதைப்பார்த்த போலீசார் பதற்றம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடுபோல் ஆனது.

கள்ளக்காதல் விவகாரம்

இதையடுத்து காரில் கருகிய நிலையில் கிடந்த ஆண் மற்றும் பெண்ணின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் அவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? போன்ற எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இருப்பினும் தீவைத்து எரிக்கப்பட்ட கார் கிரீசுக்கு சொந்தமான கார் என்று போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.

அதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தியாவையும், கிரீசையும் யாரோ மர்ம நபர்கள் புஷ்பகிரி மலைக்கு கடத்தி வந்து கொன்று உடல்களை கிரீசுக்கு சொந்தமான காரிலேயே வைத்து தீவைத்து எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். உடல்கள் மிகவும் கருகி இருந்ததால் அந்த ஆணும், பெண்ணும் யார் என்று போலீசாரால் கண்டறிய இயலவில்லை.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் அந்த ஆண் மற்றும் பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஹலேபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story