ஆயக்குடியில், ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை
பழனி அருகே ஆயக்குடியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
பழனி,
திண்டுக்கல், நத்தம், பழனி, ஆயக்குடி உள்பட பல்வேறு பகுதிகள் மாம்பழ குடோன்கள் உள்ளன. இங்கு மாங்காய் களை மொத்தமாக வாங்கி வந்து குடோன்களிலேயே பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் ஆயக்குடியில் ரசாயன மூலம் மாங்காய்களை பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜாபர்சாதிக், சிவசந்திரன், ஜோதிமணி, லியோஆன்ட்ரூஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை ஆயக்குடிக்கு சென்றனர். ஆயக்குடி பகுதியில் மட்டும் 20 மாம்பழ குடோன்கள் உள்ளன. அதில் 10 குடோன்களில் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த குடோன்களில் மாங்காய்களுக்கு நடுவே ரசாயன கற்களை வைத்தும், ரசாயன திரவத்தை மாங்காய்கள் மீது தெளித்தும் செயற்கையாக பழுக்க வைத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குடோன்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான சுமார் 5 டன் மாம்பழங் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர 10 கிலோ ரசாயன கற்களையும் பறிமுதல் செய்தனர். அவை மூலம் சுமார் 200 டன் மாங்காய்களை பழுக்க வைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்த மாம்பழங்களை இன்று (ஞாயிற்றுக் கிழமை) அழிக்கப்படும்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து மாம்பழ குடோன்களிலும் சோதனை நடத்தப்படும் என்றும் கூறினர்
Related Tags :
Next Story