மராட்டியத்தில் தொடக்க நாளிலேயே பருவமழை வெளுத்து வாங்கியது பஸ், ரெயில், விமான சேவை பாதிப்பு வெள்ளத்தில் மிதக்கும் மும்பை


மராட்டியத்தில் தொடக்க நாளிலேயே பருவமழை வெளுத்து வாங்கியது பஸ், ரெயில், விமான சேவை பாதிப்பு வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 9:42 PM GMT)

மராட்டியத்தில் பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மழை வெளுத்து வாங்கியது. மழைநீர் தேங்கியதால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் பஸ், ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது.

மும்பை, 

மராட்டியத்தில் பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மழை வெளுத்து வாங்கியது. மழைநீர் தேங்கியதால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் பஸ், ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

கனமழை

வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன்படி நேற்றுமுன்தினம் இரவு முதலே மும்பையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணியில் இருந்து நகரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழை அதிகாலை 3.30 மணி வரையிலும் நீடித்தது. மழையின் போது, பயங்கர இடி, மின்னலின் தாக்கமும் இருந்தது. காலையிலும் கனமழை பெய்தது. இரவிலும் மழை கொட்டியது.

இதன் காரணமாக மும்பையின் பல இடங்கள் வெள்ளக்காடாகின. கிழக்கு விரைவு சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

சாலைகளில் வெள்ளம்

மாகிம், பரேல் இந்துமாதா, மெரின்டிரைவ், கிங்சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி ஏரி போல் காட்சி அளித்தன.

வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றன. இதன் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிழக்கு விரைவு சாலை, மேற்கு விரைவு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். பஸ் சேவை பாதிப்பு காரணமாக பயணிகள் சிரமத்துக்கு ஆளானார்கள்.

மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வாகனங்கள் பழுதாகி நின்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின.

இதனால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதசாரிகள் அவதி அடைந்தனர்.

விமான சேவை பாதிப்பு

கனமழையால் மும்பையில் விமான சேவையிலும் பாதிப்பு உணரப்பட்டது. 20 உள்நாட்டு விமானங்களும், 12 சர்வதேச விமானங்களும் தாமதமாகின. 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கொட்டி தீர்த்த கனமழையால் மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. கல்யாண் ரெயில் நிலையம் அருகே ஸ்லோ வழித்தட தண்டவாளத்ைதயொட்டி இருக்கும் சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதன் காரணமாக ஸ்லோ மின்சார ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.

சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் கிடந்த இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. மழையின்போது பைகுல்லா போலீஸ் நிலையத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

ஊர்ந்தபடி சென்ற ரெயில்கள்

சயான்- மாட்டுங்கா, காஞ்சூர்மார்க்- விக்ரோலி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களை மழைநீர் மூழ்கடித்தது. சயான் ரெயில் நிலையத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் விரைவு மற்றும் ஸ்லோ வழித்தடங்களில் ரெயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன. சயான்- மாட்டுங்கா இடையே மின்சார ரெயில்கள் ஊர்ந்தபடி சென்றன. அனைத்து ரெயில்களும் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.

கனமழை எச்சரிக்கை காரணமாக வேலைக்கு செல்லும் பலரும் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துகொண்டனர்.

100 மில்லி மீட்டருக்கும்...

மும்பையை அடுத்த தானே, பால்கர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் கிஷோர் கூறுகையில், ‘இந்துமாதா, தாராவி, பரேல் போன்ற பகுதியில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவு மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகள் தண்ணீர் தேங்க காரணமாகி விட்டது.

அந்தேரி-குர்லா ரோடு, சாந்தாகுருஸ், ஒபேராய் மால், லோகண்ட்வாலா சர்க்கிள் ஆகிய பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. 3 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்றார்.

கனமழை நீடிக்கும்

இந்தநிலையில் மராட்டியத்தில் நேற்று பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்கும் எனவும் எச்சரித்து உள்ளது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மும்பை வெள்ளக்காடாக மாறிவிட்ட நிலையில், தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை காட்டிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீர் அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்தன.

Next Story