மும்பையில் ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்தில் பயங்கர தீ கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்ததில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் காயம்
மும்பை சி.எஸ்.எம்.டி. அருகே உள்ள ஆங்கிலேயர் காலத்து அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் தீயணைப்பு படையினர் 2 பேர் காயம் அ
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி. அருகே உள்ள ஆங்கிலேயர் காலத்து அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் தீயணைப்பு படையினர் 2 பேர் காயம் அடைந்தனர்.
ஆங்கிலேயர் காலத்து கட்டிடம்மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகில் கோத்தாரி என்ற ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 5 மாடிகள் கொண்ட பழமையான கட்டிடம் உள்ளது.
மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பு கருதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இருப்பினும் அந்த கட்டிடம் இடிக்கப்படாமல் காலியாக இருந்தது.
பயங்கர தீ விபத்துஇந்தநிலையில் அந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் கட்டிடத்தின் 2–வது மாடியில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறி கொண்டிருந்தது.
இதன் காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியதுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற மாடிகளுக்கும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 18 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
ஒரு பகுதி இடிந்ததுஅவர்கள் ராட்சத ஏணிகளில் நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு படையினர் போராடினார்கள். இந்தநிலையில், தீயின் தாக்கம் காரணமாக திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அப்போது, அருகில் இருந்த தீயணைப்பு படையினரின் ராட்சத ஏணி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன. இதில், ஏணியில் நின்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர்கள் சுகாஷ் மானே, சுதீர் தேவ்லேகர் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
சுகாஷ் மானேவுக்கு இடது கை மற்றும் காலிலும், சுதீர் தேவ்லேகருக்கு தலை, கழுத்து, காலிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாயர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணைஇதன்பின்னர் சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் பக்கத்து கட்டிடங்களுக்கு பரவாமல் தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.