மாவட்ட செய்திகள்

காவிரி நீர் திறப்பில் மரபை மீறிய அறிவிப்பு + "||" + Traditional notice on Cauvery water opening

காவிரி நீர் திறப்பில் மரபை மீறிய அறிவிப்பு

காவிரி நீர் திறப்பில் மரபை மீறிய அறிவிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழ்நாட்டின் உணவு தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் வகையில் நெல்லை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் காவிரி நீரை வாழ்வாதாரமாக கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மாற்றுத் தொழிலோ, வருவாயோ கிடையாது.

காவிரிக்கு மாற்று காவிரி தான். எனவே மாற்று பாசன வாய்ப்பும் இல்லை. சுமார் 12 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு காவிரி நீரைதான் பாசனத்துக்கு நம்பி இருக்கிறார்கள். அதையே பயன்படுத்தி வருகிறார்கள்.


தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 13½ லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சாகுபடி பரப்பளவாக உள்ளன. இவற்றில் சுமார் 1½ லட்சம் ஏக்கரில் கிணற்று பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் குறைந்து இதற்கும் பேராபத்து ஏற்படுத்திவிட்டது.

களிமண் வகை என்பதால் மழை நீரைக் கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாது. ஆறுகளில் தண்ணீர் வந்தால் தான் ஆற்றுமணல் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

2011-ம்ஆண்டு ஜூன் 6-ல் தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நல்ல மகசூலும் கிடைத்தது. அதற்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஒரு போக சம்பா சாகுபடியும் தென்மேற்கு பருவ மழை குறைவானதாலும், கர்நாடக அரசின் நயவஞ்சக நடவடிக்கையாலும், வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதாலும் சில முறை முற்றிலும் சாகுபடி பாதிப்பு, சில நேரங்களில் மகசூல் இழப்பையும் விவசாயிகள் சந்தித்துள்ளனர்.

இதனால் கடன் வாங்கி பயிர் செய்த சுமார் 400-க்கும் அதிகமான விவசாயிகள் கடனை கட்டமுடியாமலும், விவசாயம் பொய்த்துப்போனதாலும் அதிர்ச்சியில் தற்கொலை செய்துள்ளனர். சிலர் அதிர்ச்சியில் வயல்வெளிகளிலே உயிர் விட்டனர்.

இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழையும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தொடங்கி கேரளா, கர்நாடக மாநிலங்களில் அபரிதமாக பெய்து வருகிறது. இதனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து காவிரியில் உரிய அளவு தண்ணீரை பெற்று தரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வழக்கமாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வேண்டிய ஜூன் 12-ந்தேதியில் இந்த முறை தண்ணீர் திறக்கப்படும் என நம்பி இருந்தனர்.

ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படாது என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்து உள்ளார். இது விவசாயிகளின் தலையில் பேரிடியாக இறங்கி இருக்கிறது. விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. நம்பிக்கை தகர்ந்துபோய்விட்டது.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு மரபை மீறிய செயலாகும். ஏனென்றால், 110 விதி என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை விவாதம் இன்றி அறிவிப்பதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் தான் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் அணையை திறக்கமாட்டோம் என்பதை இந்த விதியின் கீழ் அறிவித்து இருப்பது பொருத்தமில்லை. இதனால் பிற கட்சியினர் அதன் மீது கருத்து சொல்லவோ, விவாதம் நடத்தவோ முடியாமல் போய்விட்டது.

கடந்த காலங்களில் ஜூன் மாதம் இறுதியில் கூட குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து சட்டசபையில் விவாதித்து முடிவெடுக்கக் கூட வாய்ப்பளிக்காமல் சர்வாதிகாரப் போக்கான அறிவிப்பை கேட்டு விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

கர்நாடக அரசு ஆணைய உறுப்பினர்கள் பட்டியல் கொடுப்பதற்கு உள் நோக்கத்தோடு காலம் கடத்தி வரும் நிலையில், அதற்கு மத்திய நீர்வள ஆணைய செயலாளர் யூ.பி.சிங் தன்னிச்சையாக கால அவகாசம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் 15, 16-ந் தேதிகளில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து காவிரி குறித்து பேச உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பதை எடுத்துரைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டியநிலையில், முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாது என கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த அறிவிப்பு யாரை திருப்திப்படுத்துவதற்கானது? என்பதை தமிழக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை முடக்க நினைக்கும் மத்திய அரசு, கர்நாடக அரசுகளின் சூழ்ச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

எனவே அறிவிப்பை மறுபரிசீலினை செய்து ஜூன் மாத இறுதிக்குள் மேட்டூர் அணையை திறந்து இவ்வாண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெறுவதற்கு உள்நோக்கத்துக்கு இடமின்றி அவசரக்கால நடவடிக்கை மேற்கொள்வது தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

- பி.ஆர்.பாண்டியன், பொதுச்செயலாளர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்

தொடர்புடைய செய்திகள்

1. கடைமடையை அடையாத காவிரி நீர் - காரணம் யார்?
ஜூன் மாதம் தொடக்கத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் இருந்து எழுந்த குரல், “சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்பது.