நாய்களுக்காக நாட்டை மறந்த தம்பதி


நாய்களுக்காக நாட்டை மறந்த தம்பதி
x
தினத்தந்தி 10 Jun 2018 11:30 AM IST (Updated: 10 Jun 2018 11:30 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து தம்பதியர் தெருநாய்கள் காட்டிய பாசத்தில் மனம் நெகிழ்ந்து போய் அவைகளை பராமரிக்கும் நோக்கோடு நிரந்தரமாக கேரளாவில் தங்கி விட்டார்கள். அந்த தம்பதியர் பெயர் ஸ்டீவ்-மேரி மஸ்குரோப்ட்.

ஸ்டீவ்-மேரி மஸ்குரோப்ட் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுப்பயணமாக கோவளத்திற்கு வந்திருக்கிறார்கள். அங்கு இரண்டு தெரு நாய்கள் அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது. அந்த நாய்களின் நன்றியுணர்வு இருவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. இரண்டு நாய்களிடமும் பாசத்தை பொழிந்திருக்கிறார்கள்.

சுற்றுப்பயணம் முடிந்த பிறகு நாய்களை பிரிந்து செல்ல மனமில்லாமல் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்கள். அடுத்து பரா மரிப்பின்றி தெருவில் சுற்றித்திரியும் மற்ற நாய்களின் நலனிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். அதற்காக தெருநாய்களை கவனிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் நோய்வாய்ப்பட்ட நாய்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பது, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது போன்ற பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். தற்போது இவர்களிடம் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடைக்கலமாகி இருக்கிறது. அவைகளை பராமரிப்பதற்காக சிறப்பு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

தெருநாய்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருப்பதற்கான காரணத்தை ஸ்டீவ் சொல்கிறார்.

‘‘இரண்டு நாய்கள் தான் எங்களுடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய முக்கிய கதாபாத்திரங்கள். அவைகளை பிரிந்து எங்கள் நாட்டிற்கு செல்ல மனம் ஒப்புகொள்ளவில்லை. இங்கேயே தங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். நாங்கள் திரும்பி சென்றுவிட்டால் அவைகளை கவனிப்பதற்கு யாரும் இல்லை. அவைகள் காட்டிய பாசம் எங்களை இங்கேயே கட்டிப்போட்டுவிட்டது. நாங்கள் ஆங்கிலம்தான் பேசுவோம். ஆனால் மலையாளத்தில் அறிவுறுத்தினால்தான் நாய்கள் புரிந்து கொள்கின்றன. அதற்காக கொஞ்சம் சிரமப்படுகிறோம்’’ என்கிறார்.

ஆரம்பத்தில் நாய்களுக்கு தேவையான உணவு வகைகளை வாங்க 15 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறார்கள். அந்த ஆட்டோவை ஓட்டிய குக்கு என்பவர் இப்போது இவர்கள் நடத்தும் அமைப்பில் நாய்களை கண்காணிக்கும் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். தெருநாய்களை பராமரிப்புக்காகவே தங்கள் சொந்த பணத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். இதுவரை 322 நாய்களை தத்தெடுத்திருக்கிறார்கள். 2,483 நாய்களுக்கு தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். 1531 நாய்களுக்கு கருத்தடை செய்திருக்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் தெருநாய்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்ற ஆதங்கம் ஸ்டீவ்-மேரி தம்பதியர்களிடம் இருந்திருக்கிறது. "பெரும்பாலான மக்கள் நாய்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்ற ஆதங்கம் எங்களுக்குள் இருந்தது. நாய்களை யாரும் வீட்டுக்குள் அனுமதிப்பதுமில்லை. ஆனால் நாய்கள் தெருக்களில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றன” என்கிறார்கள்.



பாசம் நிறைந்த தெரு நாய்கள்

தெரு நாய்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் சொந்த நாட்டை மறந்து இந்தியாவில் வசிக்கும் மேரி தம்பதிகள், தெரு நாய்களை பராமரிப்பது தொடர்பாக நிறைய தகவல்களை தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களில் சில:

- வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், வீட்டில் உள்ள தனது எஜமானர்களுக்கே விசுவாசமாக இருக்கும். ஆனால் ெதருநாய்களை பொறுத்தவரையில் அவை, தெருவில் உள்ள அனைவரிடமுமே பாசம்காட்டும். தன் மீது யாராவது பாசம் காட்டமாட்டார்களா என்ற ஏக்கத்துடனே அது இங்கும் அங்குமாக அலைந்துகொண்டிருக்கும். தன்னிடம் பாசம் காட்டுபவர்களுக்காக அது எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும். அதனால்தான் தெருநாய்கள் மூலம் பலரது உயிரும், உடமைகளும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

- தெருநாய்கள் சினைக்காலத்தில் அதிக தொந்தரவுகளை அனுபவிக்கின்றன. அந்த காலகட்டத்தில் அவைகளுக்கு சத்துணவு அவசியம். அதிகம் பசிக்கும். வழக்கம்போல் வேகமாக ஓடமுடியாது. மெதுவாக நடக்கும். அடிக்கடி சோர்ந்து கண்ட இடங்களில் படுத்து தூங்கவும் செய்யும்.

- அடி வயிறு பருத்துக்காணப்படுவதும், முடிகள் பளபளப்பாக ேதான்றுவதும் அதன் சினைக்கால அறிகுறியாகும். அப்போது நாயின் மடிக்காம்புகள் தடித்து, பிங்க் நிறத்திற்கு மாறியிருக்கும். ஈனும் குட்டி களுக்கு பால் கொடுப்பதற்காக இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன.

- சினை நாய்களுக்கு ஒரே நேரத்தில் அதிக உணவை கொடுத்துவிடக்கூடாது. மூன்று நேர உணவின் அளவை ஐந்து நேரமாக பிரித்து கொடுக்கவேண்டும். அதிக ஓய்வு கொடுத்து, போதுமான அளவு சுத்தமான நீரும் பருக வழங்கவேண்டும்.

- கருவுற்ற தெரு நாயை பார்த்தால் அதனிடம் மனிதாபிமானமாக நடந்துகொள்ளுங்கள். அடித்து துரத்தாதீர்கள். அந்த காலகட்டத்தில் இவை பலவீனமாக இருப்பதால் ஓடும்போது விபத்தில் சிக்கக்கூடும். மற்ற நாய்கள் கடிப்பதாலும் அதற்கும், வயிற்றில் இருக்கும் குட்டிக்கும் ஆபத்து ஏற்படலாம். விரும்பினால் அதற்கு அவித்த முட்டையும், பாலும் வழங்குங்கள்.

- நாயின் சினைக்காலம் சுமார் 60 நாட்கள். அது ஒன்று முதல் எட்டு குட்டிகள் வரை ஈனும். தெருநாய்கள் கருத்தரிக்காமல் இருக்க, அவைகளுக்கு கருத்தடை செய்யும் முறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது.

Next Story