துருப்பிடிக்காத கலைப்படைப்புகள்


துருப்பிடிக்காத கலைப்படைப்புகள்
x
தினத்தந்தி 10 Jun 2018 12:19 PM IST (Updated: 10 Jun 2018 12:19 PM IST)
t-max-icont-min-icon

சிற்ப வேலைப்பாடுகளில் தங்கள் கைவண்ணத்தை பதிக்கும் சிற்பிகள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

மணல் சிற்பம், மர சிற்பம், கல் சிற்பம், கண்ணாடி சிற்பம், பிளாஸ்டிக் சிற்பம், கான்கிரீட் சிற்பம் என விதவிதமான சிற்ப வேலைப்பாடுகளில் தங்கள் கைவண்ணத்தை பதிக்கும் சிற்பிகள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டு தெரிகிறார், ஆர்.சோமசுந்தரம்.

துருப்பிடிக்காத இரும்புத் தகடுகளில் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) ஓவியம் வரைவது போல சிற்பங்களை அழகாக உருவாக்குகிறார். கூர்மையான முனைகளை கொண்ட பலவகையான இரும்பு ஆணிகள்தான் இவருடைய சிற்ப ஆயுதம். சிற்பம் உருவாக்குவதற்கு ஏற்ப சில இரும்பு ஆணி முனைகளை இவரே தயார் செய்திருக்கிறார். அவற்றை கொண்டு சுவர் களுக்கு பெயிண்ட் தீட்டுவது போல இரும்பு ஆணிகளை கொண்டு உரசியே படைப்புகளை உருவாக்கிவிடுகிறார். மூன்று எம்.எம். கன அளவு கொண்ட இரும்பு தகடுகளை ஒரு எம்.எம். கன அளவு வரை சுரண்டியே பட்டை தீட்டிவிடுகிறார். தன்னுடைய சிற்பங்களை மேலோட்டமாக பார்ப்பவர்களிடம் ‘இது கைவிரல்களை பயன்படுத்தி செய்ததுதான்’ என்று கூறினால் நம்ப மாட்டார்கள் என்றும் சொல்கிறார். அவர் சொல்வது போலவே ஒவ்வொரு சிற்பங்களும் அவருடைய கடின உழைப்பையும், சிற்ப கலை ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் விதமாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்திருக்கின்றன.

69 வயதாகும் சோமசுந்தரத்தின் பூர்வீகம், விருது நகர் மாவட்டத்திலுள்ள ஓ.சங்கரலிங்கபுரம் கிராமம். விருதுநகரில் ஐ.டி.ஐ. படித்து முடித்தவர், பெங்களூருவில் உள்ள ரெயில்பெட்டி தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்திருக்கிறார். ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் இரும்புத் தளவாட பொருட்களை கையாண்டதால் அதை கொண்டு வித்தியாசமாக ஏதாவது உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அவரை இத்தகைய உலோக சிற்ப கலைஞராக உருமாற்றி இருக்கிறது. இவர் இப்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். சோமசுந்தரம் இதற்காக எந்த பயிற்சியும் பெறவில்லை. படிப் பிலும், வேலையிலும் பெற்ற அனுபவத்தையே இந்த கலைக்கு அஸ்திவாரமாக்கிவிட்டார்.

தன்னுடைய படைப்புகள் மற்ற சிற்பங்களில் இருந்து தனித்துவமானது என்பதற்கான காரணத்தை அவரே சொல்ல கேட்போம்.

‘‘துருப்பிடிக்காத இரும்புத்தகடுகளில் சிற்பம் வடிப்பது சவாலான விஷயம்தான். மற்ற உலோகங்களை விரும்பும் வடிவத்திற்கு ஏற்ப எளிதாக மாற்றியமைத்துவிடலாம். அதில் தவறு நேர்ந்தாலும் சிரமமின்றி சரிப்படுத்திவிடலாம். ஆனால் துருப்பிடிக்காத தகடுகளில் சுலபமாக அப்படி செய்துவிட முடியாது. அதன் தடிமனை சிறிது குறைப்பதற்கே சில மணி நேரம் போராட வேண்டியிருக்கும். உருவங்களை செதுக்கும்போது சிறு தவறு நேர்ந்து விட்டாலும் அதனை சுலபமாக சரிப்படுத்திவிட முடியாது. ஒரு படைப்பிற்கான வெளித்தோற்றத்தை உருவாக்குவதற்கே பல மணி நேரத்தை செலவழிப்பேன். பொறுமையும், ஆழ்ந்த கவனமும் முக்கியமானது. பணியில் இருந்த காலகட்டத்தில் குறைந்த நேரமே கிடைத்ததால் இந்த கலையில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போனது. ஒரு சிற்பத்தை உருவாக்குவதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகிவிடும்’’ என்கிறார்.

சோமசுந்தரம் 40 ஆண்டுகளாக சிற்பங்களை உருவாக்குகிறார். இதுவரை 30 வகையான சிற்பங்களை தீட்டியிருக்கிறார். அவற்றுள் சாமி சிலைகள், பிரபல தலைவர்களின் உருவங்கள் பிரதானமாக இடம்பிடித்திருக்கின்றன. ஆரம்பத்தில் பித்தளையில் சிற்பம் உருவாக்குவதற்கு பழகி இருக்கிறார். அது சில மாதங்களில் பொலிவிழந்து துருப்பிடிக்க தொடங்கியதால் இரும்பு தகடுக்கு மாறி இருக்கிறார்.

‘‘மற்றவர்கள் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை புதுமையாக செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சிற்ப கலையை முறைப்படி கற்கவில்லை என்றாலும் படிப்பும், அனுபவமும் என்னை பக்குவப்படுத்திவிட்டது. பித்தளையில் சிற்பம் வடித்து பழகியபோது மன நிறைவு கிடைக்கவில்லை. கஷ்டப்பட்டு உருவாக்கும் சிற்பம் எந்தவகையிலும் சேதம் அடையக்கூடாது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் துருப்பிடிக்காத இரும்பு தகடுகள் என் கண்ணில் பட்டது. நான் வேலை பார்த்த இடத்தில் அவை வீணாக கிடக்கும். மற்ற உலோகங்களில் கார்பன் கலந்திருப்பதுதான் துருப்பிடிப்பதற்கு காரணம். ஆனால் இந்தவகை இரும்பு தகடுகளில் அவை இல்லாததால் எத்தனை ஆண்டுகளானாலும் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கின்றன. அதில் சிற்பம் செதுக்க முடிவு செய்தேன்.

யாருமே செய்யாத புதிய முயற்சியாக தோன்றியதால் ஆர்வமாக களத்தில் இறங்கினேன். பார்ப்பவர்கள் கண்களுக்கு இரும்பு தகட்டில் கிறுக்குவது போலத்தான் தெரியும். ஆனால் கிறுக்கலில் சிறு தவறு நேர்ந்தாலும் அதனை சரி செய்வதற்கே மணிக்கணக்கில் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இரும்பு தகட்டில் மேடு பள்ளங்களை ஆணி போன்ற உபகரணங்களை பயன்படுத்தி உருவாக்குகிறேன். பொறுமையாக கூர்தீட்டியதால்தான் சிற்பங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிகின்றன. என் உழைப்பு வீண் போகவில்லை. பல்வேறு தரப்பினரும் என் முயற்சியை பாராட்டுகிறார்கள். ஆரம்பத்தில் ஒரு சிலர் நான் மோல்டிங் மூலம் உருவங்களை பதித்து அதில்தான் சிற்பங்களை வடித்திருப்பதாக நினைத்தார்கள். இரும்பு தகட்டில் அப்படி மோல்டிங் செய்வது இயலாத விஷயம். நான் வெளித்தோற்ற அளவை மட்டும்தான் பதிய வைத்து சிற்பங்களை உருவாக்கு கிறேன். ஒருசிலர் வெல்டிங் செய்து சில பாகங்களை வெட்டி அதில் உருவத்தை பதித்திருப்பதாகவும் நினைத்தார்கள். அப்படி எல்லாம் இலை. இது முழுக்க முழுக்க என் கை வேலைப்பாடுதான். மற்ற சிற்பங்களுக்கெல்லாம் முறையான பராமரிப்பு தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு சிதில மடைய தொடங்கிவிடும். பொலிவும் இல்லாமல் போய்விடும். ஆனால் நான் உருவாக்கியிருக்கும் சிற்பங்கள் அப்படிப்பட்டதல்ல. வெயில், மழையால் பாதிப்புக்குள்ளாகாது. நன்றாக பாலீஷ் செய்தால் ஆண்டுக்கணக்கில் புத்தம் புதிய சிலையாகவே காட்சியளிக்கும். நான் ‘எம்மர் ஷீட்’ பயன்படுத்தி கையாலே பாலீஷ் செய்கிறேன். காட்டன் வீல் கொண்டு பாலீஷ் செய்தால் சுலபமாக வேலை முடிந்துவிடும். ஆனால் என் உழைப்பு முழுவதும் என் கைவண்ணத்தில்தான் அமைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்கிறார்.

சோமசுந்தரம் படிப்பை முடித்ததும் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்றுவிட்டதால் அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டார். அங்குள்ள ராமமூர்த்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கல்யாணி, குடும்ப தலைவி. இவர்களுடைய மகன் ரமேஷ் பாபு சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். அவருக்கு திருமணமாகிவிட்டது. அவருடைய மனைவி வசுமதி ஆசிரியராக வேலைப்பார்க்கிறார். இந்த தம்பதிக்கு பிரிதம், சரண் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்கள்.

‘‘நான் 9 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், உறுதுணையும் இருப்பதால்தான் நீண்டகாலமாக சிற்ப வேலைப்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட முடிகிறது. ஓய்வுக்கு பிறகு நிறைய பேர் பொழுதை போக்குவதற்கு சிரமப்படுகிறார்கள். அந்த சிரமத்தை போக்க அவர்கள் பார்த்து வந்த பணி சார்ந்த விஷயங்களில் கவனத்தை திருப்பினாலே போதும். அதன் மூலம் அவர்கள் ஆசைப்பட்டு நிறைவேற்ற முடியாத விஷயங்களை செய்து மன நிறைவு அடையலாம். எனக்கு ஓய்வுக்கு பிறகும் நேரம் போவதே தெரியவில்லை. காலையில் எழுந்ததும் சிற்பம் உருவாக்க களம் இறங்கிவிட்டால் சாப்பாட்டு சிந்தனை கூட எழாது. மனதில் வேறு எந்தவிதமான சிந்தனையும் எட்டிப்பார்க்காது. மனம் அமைதியாக இருக்கும். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்’’ என்கிறார்.

Next Story