உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 10 Jun 2018 2:41 PM IST (Updated: 10 Jun 2018 2:41 PM IST)
t-max-icont-min-icon

அவள் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பணியில் இருந்து கொண்டிருந்தாள். அதிக சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது.

நிறுவனத்தின் அருகில் வர்த்தக மையம் ஒன்றை நடத்திவந்த இளைஞனுக்கும், அவளுக்கும் காதல் அரும்பியது. அவன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். அவள் மிக அழகாக இருப்பதாலும், நாலைந்து மொழிகள் பேசும் அளவுக்கு திறமையானவளாக இருப்பதாலும் அவன் அவளை ரொம்பவும் ரசித்து, மதித்தான்.

ஒரு வருடத்திற்கு பிறகு அவன் தனது காதலை பெற்றோரிடம் சொன்னான். தங்களுக்கு திருமணம் செய்துவைக்கும்படியும் கூறினான். அவர்கள் தங்கள் தகுதி, அந்தஸ்து என்று கூறி முதலில் சற்று இழுத்தடித்தாலும் பின்பு அவளை திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டார்கள். ஆனால் ‘திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லவேண்டாம். சொந்த வர்த்தக மைய நிர்வாகத்தில் இணைந்து பணியாற்றட்டும்’ என்றார்கள்.

நாலைந்து வருட அனுபவமும், நல்ல சம்பளமும், பெருமளவு வெளிவட்டார தொடர்புகளும் அந்த பணி மூலம் கிடைத்துக்கொண்டிருந்ததால், அவளுக்கு அந்த வேலையை விட விருப்பம் இல்லை என்றாலும், வேலைக்கு செல்வதை வருங்கால கணவர் குடும்பம் கவுரவக்குறைச்சலாக நினைத்ததால், அவள் வேலையில் இருந்து விலக முன்வந்தாள்.

அவளது பெற்றோருக்கு, ‘வசதிபடைத்த மாப்பிள்ளை வீட்டார், வசதிகுறைந்த தங்களை சரியாக மதிக்கமாட்டார்கள்’ என்ற கவலை இருந்தது. ஆனாலும் மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று கருதி திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அவர்கள் திருமணம் ஆடம்பரமாக நடந்தது. முழுசெலவையும் மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் வீட்டு மருமகள் வசதிபடைத்தவள் என்பதை காட்டிக் கொள்வதற்காக அவர்கள் செலவிலே அவளுக்கு வைர நெக்லஸ் போன்றவைகளை எல்லாம் வாங்கி அணிவித்தார்கள். திருமணம் முடிந்த சில நாட்களிலே அவர்களை தேனிலவுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட அவர்கள் பயணம் ஒரு மாதம் நீடித்தது.

அந்த காலகட்டத்தில் மாமனாரின் பங்களாக்களிலும், அலுவலகங்களிலும் அதிர்ச்சியான சில விஷயங்கள் அரங்கேறி விட்டன. பெரிய அளவில் ‘ரெய்டு’ ஒன்று நடந்தது. அதில் வசமாக சிக்கிக் கொண்டார்கள். கணவரின் தங்கை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கு விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தாள். அவளது மாமியார் விழாமேடை ஒன்றில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். புதுமணத் தம்பதிகள் தேனிலவை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்குள், இப்படி சில கவலைக்குரிய விஷயங்கள் நடந்துவிட்டன.

மகனின் திருமணத்திற்கு பிறகு ஒன்றன்பின் ஒன்றாக பல அடிகள் விழுந்ததும், தந்தை நொறுங்கிப் போனார். மகன், மருமகள் உள்பட அனைவர் ஜாதகங் களையும் எடுத்துக் கொண்டு, தனது ஆஸ்தான ஜோதிடரிடம் சென்றார். எல்லோரது ஜாதகங்களையும் வேகமாக கணித்த அவர், புதுப் பெண்ணின் ஜாதகத்தில் வெகு நேரத்தை செலவிட்டுவிட்டு, ‘இந்த ஜாதகருக்கு மறுமணம் நடக்கும். அதனால் முதலில் திருமணம் செய்தவருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம். இந்த ஜாதகரால், முதலில் திருமணம் செய்து கொண்டவரின் குடும்பத்தினரும் சொல்ல முடியாத வேதனைகளுக்கு உள்ளாவார்கள்’ என்று கூறி, அவளது மாமனாரிடம் பயத்தை உருவாக்கி விட்டார்.

இப்படி அவர் ‘பலன்’ சொன்னதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் பலமுறை ரகசிய ஆலோசனைகள் நடத்தி, பெருந்தொகை கொடுத்து அந்த புதுப்பெண்ணை நிரந்தரமாக அவளது தாய் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். முதலில், ‘தன் உயிரே போனாலும் காதல் மனைவியை பிரிய மாட்டேன்’ என்ற கணவரும், இப்போது தந்தை சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்..!

- உஷாரு வரும். 

Next Story