நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 10 Jun 2018 10:00 PM GMT (Updated: 10 Jun 2018 6:42 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் ஊட்டி, கூடலூரில் மண் சரிவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே சாலையோரங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மின்கம்பங்கள் சேதமடைகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர்.

காத்தாடிமட்டம்–எடக்காடு சாலை மற்றும் தொட்டபெட்டா–இடுஹட்டி சாலையோரத்தில் இருந்த மரங்கள் திடீரென வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்மழை காரணமாக ஊட்டி–அவலாஞ்சி சாலையில் எடக்காடு, இத்தலார், எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட 15 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்றினர். விவசாய நிலத்தில் இருந்து அடித்து வரப்பட்ட மண் தங்காடு–எடக்காடு சாலையில் படிந்ததால் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

மழை காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெரணி இல்லம் அருகே உள்ள புல்வெளி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மலர் மாடங்களில் வைக்கப்பட்டு உள்ள பல்வேறு வண்ண மலர்களை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி பூங்காவை கண்டு களித்தனர். மழையால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

ஊட்டி படகு இல்லத்தில் நேற்றும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. பலத்த காற்று காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மிதி படகுகள் இயக்கப்பட வில்லை. சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மான் பூங்கா சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் ஒன்று உடைந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுபோல் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. கூடலூரில் 82 மி.மீட்டரும், தேவாலாவில் 88 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியது. நேற்று முழுவதும் தொடர் பலத்த மழை பெய்தது. இதனால் கூடலூர்– மைசூர் செல்லும் சாலை மரப்பாலம் என்ற இடத்தில் மரம் ஒன்று சரிந்து விழுந்தது. தொடர்ந்து அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே மற்றொரு மரம் சரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் நேரில் சென்று மரங்களை அறுத்து அகற்றினர்.

இதனிடையே கூடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுக்கு முன்பாக மண் சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்தது.மேலும் கூடலூர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் இருந்து கோத்தர்வயலுக்கு செல்லும் சாலையில் கணேசன் என்பவரின் கார் மீது மரம் சரிந்து விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து வருவதால் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை தீவிரமாக பெய்து வருவதால் கூடலூர் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் பாண்டியாறு, மாயார், பொன்னானி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடலூர் புஷ்பகிரி, ஊட்டி சாலை உள்பட பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பந்தலூர் தாலுகாவிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பாட்டவயலில் இருந்து பாலாப்பள்ளி கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்கம்பிகள் அறுந்தன. போக்குவரத்து வாகனங்கள் மிக குறைவாக செல்லும் சாலை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதனால் பல மணி நேரத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–

குன்னூர்–7, கூடலூர்–64, குந்தா–60, கேத்தி–12, கோத்தகிரி–4, நடுவட்டம்–42.2, ஊட்டி–47.2, கல்லட்டி–20, கிளன்மார்கன்–70, அப்பர்பவானி–206, எமரால்டு–94, அவலாஞ்சி–285, கெத்தை–7, கிண்ணக்கொரை–3, கோடநாடு–12, தேவாலா–67 என மொத்தம் 1000.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இந்த மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக 58.85 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூர் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் பாண்டியாறு–புன்னம்புழா ஆறு வழியாக சென்று கேரள மாநிலத்தில் உள்ள பாரதபுழா ஆற்றில் வீணாக கலந்து வருகிறது. வீணாக செல்லும் மழைநீரை மரப்பாலம், பாண்டியாறு, தேவாலா பகுதிகளில் அணைகளை கட்டி தண்ணீரை கூடலூர், முதுமலை வழியாக பவானி ஆற்றில் கலக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். நீலகிரியில் ஆயிரம் மில்லி மீட்டர் மழை பெய்தாலும், அந்த தண்ணீரை தமிழகத்தில் உள்ள அணைகளில் சேமிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி, அப்பர்பவானி, கிளன்மார்கன், கல்லட்டி, எமரால்டு, கெத்தை, கிண்ணக்கொரை, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் குந்தா அணை, அப்பர்பவானி அணை, எமரால்டு அணை, கிளன்மார்கன் அணை, பைக்காரா அணை, சிங்காரா அணை, மாயார் அணை மற்றும் பார்சன்ஸ்வேலி அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. மேற்கண்ட அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலக்கிறது. மேலும் வனப்பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரும் பவானி ஆற்றில் சேருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


Next Story