கூடலூரில் நகராட்சி அதிகாரிகள் சோதனை: 44,700 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கூடலூரில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 44,700 கிலோ பிளாஸ்டிக்பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 வியாபாரிகளிடம் இருந்து ரூ.45,500 அபராதமும் வசூலித்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் 50 மைக்ரான் அளவு கீழ் உள்ள பிளாஸ்டிக்பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து சிறு வணிகர்கள், பொதுமக்களுக்கு அதிகளவு விற்பனை செய்வதாக நகராட்சி நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ஆணையாளர் பார்வதி தலைமையில் ஸ்ரீஜித், ரமேஷ், செல்வம் உள்ளிட்ட பணியாளர்கள் கூடலூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 30 கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 25 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்தியது தெரிய வந்தது.
ஆனால் மீதமுள்ள 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 44,700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது நகராட்சி அலுவலர்களிடம் கையும்களவுமாக சிக்கி கொண்ட வியாபாரிகள் இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள் வியாபாரிகளின் உறுதிமொழியை ஏற்க வில்லை.
பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தவறு என கூறி நகராட்சி ஆணையாளர் பார்வதி 5 வியாபாரிகளுக்கு ரூ.45,500 அபராதம் விதித்து உடனடியாக வசூலித்தார். நகராட்சி வரலாற்றில் அதிக அளவு பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்து அபராத தொகையும் வசூலித்தது இதுவே முதன்முறையாகும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.