தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரிடம் போலீசார் விசாரணை மேலும் சிலரை கைது செய்ய தீவிரம்


தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரிடம் போலீசார் விசாரணை மேலும் சிலரை கைது செய்ய தீவிரம்
x
தினத்தந்தி 11 Jun 2018 2:00 AM IST (Updated: 11 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22–ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பல்வேறு வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புகளுக்கு தீவைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள், அரசு அலுவலகங்களும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

243 வழக்குகள்

இதுதொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுவரை 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத் தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் மேற்பார்வையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையிலான 5 தனிப்படைகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளன.

500 புகைப்படங்கள்

கடந்த 22, 23–ந் தேதிகளில் நடந்த கலவரக் காட்சிகள் தொடர்பாக வீடியோ பதிவுகள், கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு, கார்கள் உடைப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான புகைப்படங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளன. சுமார் 500 புகைப்படங்கள், தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்து அனுபவம் மிக்கவர்கள், நீண்டநாட்களாக பணியாற்றி வருபவர்களை அழைத்து வந்து புகைப்படங்களை காண்பித்து வருகின்றனர்.

இதன்மூலம் ஏராளமானவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். அடையாளம் கண்டறியப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளிமாவட்ட போலீசாரும், தூத்துக்குடி போலீசாரும் இணைந்த தனிப்படையினர் நேற்று அதிகாலை முதல் கைது நடவடிக்கைகளில் இறங்கினர்.

விசாரணை

அதன்படி போராட்டங்களை முன்னின்று நடத்திய 9 பேரை பிடித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மதுரையை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து வந்து உள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாலும், மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாலும் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பலர் வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.


Next Story