காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு நாடவேண்டும், டெல்டா மாவட்டங்கள் அழிந்து விடும் - பாலகிருஷ்ணன் பேட்டி
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை என்றால் டெல்டா மாவட்டங்கள் அழிந்து விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
சிவகாசி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று திருத்தங்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு பல நாட்கள் ஆன பின்னர் கூட மத்திய அரசு அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. மாநில அரசும் கர்நாடகத்தை அணுகி தண்ணீரை பெற தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை. இப்போது தண்ணீர் இல்லை அதனால் மேட்டூர் அணையை திறக்க முடியாது என்று முதல்–அமைச்சர் கூறுகிறார்.
7–வது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை என்று சொன்னால் டெல்டா மாவட்டங்களே அழிந்துவிடும். ஆணையத்தை அணுகி கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளில் இருந்து கோடைகாலங்களில் தண்ணீர் எடுக்க தடை ஆணை பெற வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் குறுவை சாகுபடிக்கு நீர் பெற வழி செய்ய வேண்டும்.
கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியின் போது வன்முறை வெறியாட்டத்தினை நிகழ்த்திய பா.ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடாமல் இயக்குனர் அமீர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா கட்சியின் சர்வாதிகாரபோக்கை இனியும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது.
சட்டசபையில் சமர்ப்பித்த அறிக்கைகளே தமிழக அரசு எவ்வளவு மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு–குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு சிறுதொழில்கள் அழிகின்ற நிலையில் உள்ளது. சிறு தொழில்களை அழித்து கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் முயற்சியை தான் மத்திய அரசு செய்கிறது. திருச்சியில் வருகிற 14–ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரமாண்ட அளவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய பொதுசெயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் பயங்கரவாத சக்தி என்றால் அது பா. ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் தான். தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை என்ற பாதையை தேர்வு செய்ய கூடாது. தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது. நீட் தேர்வால் இந்தியா முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்ற போராட்டத்தை மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்ந்து நடத்த வேண்டும். அந்த போராட்டத்தின் மூலம் தான் நீட்டை ஒழித்துக்கட்ட முடியும். அப்போது தான் மாணவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.