1,198 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்


1,198 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 1,198 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதியோர், மாற்றுத்திறனாளி, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட 8 பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளுக்கு மாதா மாதம் உதவித்தொகை வழங்க தகுதி வாய்ந்த 1,198 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த நபர்களுக்கு, கரூர்-கோவை ரோட்டிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் ரூ.14 கோடியே 37 லட்சம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 551் பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 232 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் மொத்தம் 1,198 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 37 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியபோது கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களின் மூலம் பல்வேறு மாநிலங்களும் தமிழகத்தை உற்றுநோக்குவதிலிருந்தே அதன் வெற்றி புலப்படுகிறது. அந்த வகையில் முதியோர் உதவித்தொகை ரூ.500-ஆக இருந்ததை ரூ.1,000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 28,117 பயனாளிகள் உதவித்தொகை பெற்றுள்ளனர். இன்று (நேற்று) வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் ஜூலை 6-ந் தேதி முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். இதனை வழங்குவதை எனது வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். கரூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பட்டா இல்லாதவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரவக்குறிச்சி அண்ணாநகர் பகுதி மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், ரூ.1,000 என்பது வசதி படைத்தவர்களுக்கு ஒரு நாள் செலவு போன்றது தான். ஆனால் ஏழை எளியோருக்கு இந்த தொகை தான் அவர்களது அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அங்கமாக விளங்குகிறது. எனவே இதனை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை) மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திருவிகா, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.செல்வராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் பேங்க் ஆர்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story