மாவட்ட செய்திகள்

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு + "||" + Deferred Bengaluru jeynagar constituency Voting today

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு
பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

பெங்களூரு, 

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் (மே) 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து பிரசாரம் தீவிரமாக நடந்து வந்தது. அந்த நேரத்தில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜயகுமார் எம்.எல்.ஏ. திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதையடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் ஜூன் 11–ந் தேதி(இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். பா.ஜனதா சார்பில், மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டுள்ளார்.

19 பேர் போட்டி

ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக இருந்த காளேகவுடா கட்சியின் அறிவுரைப்படி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் அந்த தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கு ஆதரவாக அவருடைய தந்தை ராமலிங்கரெட்டி மற்றும் உள்ளூர் தலைவர்கள் மட்டுமே வாக்கு சேகரித்தனர். அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் யாரும் ஜெயநகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை ஜெயநகர் தொகுதியில் பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது.

இன்று ஓட்டுப்பதிவு

இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் ஏற்கனவே அறிவித்தபடி தேர்தல் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தலையொட்டி 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். முறைகேடுகளை தடுக்க ‘வெப் கேமிரா‘ மூலம் ஓட்டுப்பதிவை வீடியோ எடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பலத்த பாதுகாப்பு

ஓட்டுப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்‘ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள ஒரு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அறையின் கதவுகள் மூடி சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தலையொட்டி ஜெயநகர் தொகுதியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் 10 கம்பெனி மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் ஜெயநகர் தொகுதியில் உள்ள பதற்றமான 66 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதுதவிர 10 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 2 துணை போலீஸ் கமி‌ஷனர்கள், 6 உதவி போலீஸ் கமி‌ஷனர்கள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக பெங்களூரு போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் தெரிவித்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன்எச்சரிக்கையாக எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

13–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13–ந்தேதி (புதன்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரையில் ஜெயநகர் தொகுதியை பா.ஜனதா தக்கவைத்து கொண்டால், சட்டசபையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 104–ல் இருந்து 105 ஆக உயரும்.

ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால் அக்கட்சியின் பலம் 78–ல் இருந்து 79 ஆக அதிகரிக்கும். ஆனால் அந்த தொகுதி தேர்தல் முடிவு கர்நாடக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.