நாமக்கல்லில் கார், ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த என்ஜினீயர் கைது போலீஸ் விசாரணை


நாமக்கல்லில் கார், ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த என்ஜினீயர் கைது போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2018 10:15 PM GMT (Updated: 10 Jun 2018 9:18 PM GMT)

நாமக்கல்லில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மற்றும் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த வழக்கில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல்,

நாமக்கல் இ.பி.காலனி ராம்நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் நைஜீரியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது49) மகள் வனிதாவுடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர்களின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் மற்றும் ஸ்கூட்டருக்கு மர்ம நபர் தீ வைத்து விட்டு சென்று விட்டார்.

இதில் கார் மற்றும் ஸ்கூட்டர் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் பார்வையிட்டபோது, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மல்லசமுத்திரத்தை சேர்ந்த ராஜபிரியன் (29) என்பதும், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்தனர்.

ராஜபிரியன் எதற்காக ஹெல்மெட் அணிந்து ராஜேஸ்வரி வீட்டு முன் நிறுத்தி இருந்த கார், ஸ்கூட்டருக்கு தீ வைத்து உள்ளார். அவருக்கும், அந்த குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ராஜேஸ்வரி குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story